குமரி அருகே பரபரப்பு: பிளஸ் 2 மாணவருடன் பள்ளி மாணவி ஓட்டம்?

3 hours ago 2

நாகர்கோவில்: குமரி அருகே தேர்வு விடுமுறையில் வீட்டில் இருந்த 9ம் வகுப்பு மாணவி இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமான பிளஸ் 2 மாணவருடன் சேர்ந்து மாயமானதாக எழுந்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குமரி மாவட்டம் அருமனை அருகே ஒரு கிராமத்தில் வசிக்கும் பெண் ஒருவர் தற்போது இரண்டாவது கணவருடன் வசித்து வருகிறார். அவரது முதல் கணவருக்கு பிறந்த 14 வயது மகளும் தன் தாயுடனே தங்கியுள்ளார். இந்த சிறுமி அருகேயுள்ள பள்ளிக்கூடத்தில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது தேர்வு விடுமுறை என்பதால் வீட்டில் இருந்தார். மாணவி தினமும் தனது தாயின் செல்போனில் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பார்ப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.

மகள் ரீல்ஸ்தான் பார்க்கிறார் என தாயார் நினைத்தார். ஆனால் மாணவி, 17 வயது ஆண் நண்பர் ஒருவருடன் சாட்டிங் செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. பக்கத்து ஊரில் வசிக்கும் ஆண் நண்பர் பிளஸ் 2 படிக்கும் மாணவர் என கூறப்படுகிறது. இந்த விஷயம் அரசல் புரசலாக மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதுகுறித்து மாணவியை தாயார் கண்டித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த மாணவியை திடீரென காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த தாயார் தனது மகளை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து மாணவியின் தாயார் அருமனை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவியுடன் பேசிய மாணவனும் திடீரென மாயமாகியுள்ளதாக கூறப்படுகிறது. எனவே மாணவன்தான் மாணவியை அழைத்து சென்றிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். அவர்கள் இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

The post குமரி அருகே பரபரப்பு: பிளஸ் 2 மாணவருடன் பள்ளி மாணவி ஓட்டம்? appeared first on Dinakaran.

Read Entire Article