குப்பைகளை தரம் பிரிப்பது குறித்த விழிப்புணர்வு பாடல் - அமைச்சர் இ.பெரியசாமி வெளியிட்டார்

3 months ago 11

குப்பைகளை தரம் பிரித்து அப்புறப்படுத்துவதற்காக திடக்கழிவு விழிப்புணர்வு பாடலை அமைச்சர் இ.பெரியசாமி இன்று வெளியிட்டார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

"தூய்மை பாரத இயக்கத்தினை தமிழகத்தில் மேலும் சிறப்பாக செயல்படுத்துவதற்கு, திடக்கழிவுகள் வீடு வீடாகச் சென்று பேட்டரியால் இயங்கும் வாகனங்கள் மூலம் சேகரிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு வீடு வீடாகச் சென்று சேகரிப்பதினை பொதுமக்களுக்கு தெரிவிப்பதற்கும், திடக்கழிவுகளை அவரவர் இல்லத்திலேயே மக்கும் மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து அப்புறப்படுத்துவதற்காக தகுந்த விழிப்புணர்வுகளை வழங்குவதற்காகவும், பேட்டரியால் இயங்கும் வாகனங்களில் ஒலிபரப்ப திடக்கழிவு விழிப்புணர்வு குறித்த பாடல் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 1.25 கோடி ஊரக குடியிருப்புகளில் 84,651 பணியாளர்கள் குப்பைகளை சேகரித்து தரம்வாரியாக பிரிப்பதற்காக பணியாற்றுகின்றனர். இதற்காக 8,315 மின்கல வாகனங்கள், மற்றும் 1,291 டிராக்டர்கள் மற்றும் 372 பிற வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த அனைத்து ஊராட்சிகளிலும் பேட்டரியால் இயங்கும் வாகனங்களில் ஒலிபரப்பிட ஏதுவாகப் இப்பாடலினை ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் இ.பெரியசாமி வெளியிட்டார். இதன்மூலம் தமிழ்நாட்டிலுள்ள 12,525 ஊராட்சிகளிலும் இப்பாடல் ஒலிபரப்பப்பட்டு, பொதுமக்களுக்கு தகுந்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

இந்நிகழ்வில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையர், பா.பொன்னையா மற்றும் துறையின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article