
சேலம் மாவட்டம் ஆத்தூர் அம்மம்பாளையத்தை சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மனைவி அனிதா. இவர் நேற்று காலை வீட்டின் அருகே குப்பை கொட்டியுள்ளார்.
இது குறித்து அருகே வசிக்கும் பூபதி என்பவர் அனிதாவிடம் வாக்குவாதம் செய்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து பூபதி தனது நண்பரான பால முருகன் என்பவரிடம் கூறியுள்ளார். பின்னர், மதியம் 2 மணியளவில் பாலமுருகன் லாரியை ஓட்டிவந்துள்ளார். அப்போது, மீண்டும் அனிதாவின் குடும்பத்தினருக்கும் பூபதிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது, பால முருகன் லாரியை வேகமாக ஓட்டிவந்து அனிதா மற்றும் அவரின் குடும்பத்தினர் மீது மோத முற்பட்டுள்ளார். அப்போது, அனிதாவின் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த கார் மீது லாரி மோதியது. இந்த சம்பவத்தில் கார் பலத்த சேதமடைந்தது.
லாரி மோத வருவதை உணர்ந்த அங்கிருந்த பெண்கள் உள்பட அனைவரும் அலறியடித்து ஓடினர். இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் தற்போது சமூகவலைதளத்தில் வைரலானது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.