பெண்கள் கால் பதிக்காத துறை இனி எதுவும் இல்லை. அந்த அளவிற்கு அத்தனை துறைகளிலும் மாஸ் வளர்ச்சி காட்டி வருகிறார்கள். அதிலும் கடந்த 10 வருடங்களாக சினிமா தொழில்நுட்பத் துறையிலும் பெண்களின் பங்கு மிகப்பெரிய அளவில் அதிகரித்து வருகிறது. இதில் தன்னையும் இணைத்துக் கொண்டு இப்போது ட்ரெண்டிங்கில் இருக்கிறார் சைதன்யா பிங்களி. யார் இந்த சைதன்யா ?… தெலுங்கு சினிமா உலகம் இவர் பெயரை உச்சரிப்பது ஏன்?. ஏனெனில் தற்போது வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் ‘‘குபேரா” திரைப்படத்தின் கதை ஆசிரியர். கற்றலைக் கடந்த எழுத்தின் பாதையில் தன்னை செலுத்தி வெற்றிக் கண்டு வருகிறார். இவரது குடும்பப் பின்னணியும் அவ்வளவு சாதாரணம் அல்ல. சைதன்யா இந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவரும் சுதந்திரப் போராட்ட வீரருமான பிங்கலி வெங்கையாவின் கொள்ளுப்பேத்தி.
அப்பா தசரதர், தனது ‘‘என்கவுண்டர்” பத்திரிகை மூலம் தெலுங்கு உலகில் பரபரப்பை ஏற்படுத்தியவர். அவர் ஒரு சமூகப் போராளி. இதனாலேயே எதிரிகள் அதிகம், சைதன்யா சிறுவயதாக இருந்தபோதே அவர் அப்பா படுகொலை செய்யப்பட்டார். அப்பாவின் எழுத்து சைதன்யாவையும் விடவில்லை. “ஆமா, நான் பிங்களி தாசரதராமின் மகள். என் அப்பா இறந்தப்போ எனக்கு மூன்று வயசுதான்,” என நினைவுகூர்கிறார் சைதன்யா. “என் அப்பா கொலை செய்யப்பட்ட பிறகு, என் அம்மா ரொம்பவே பயந்துபோனாங்க. அதனால, எப்பவும் அப்பா பற்றி என்னிடமும் ரெண்டு தம்பிகளிடமும் அம்மா பேசவே மாட்டாங்க. எனக்கு விவரம் தெரிந்துதான் நான் இன்னார் மகள், பேத்தி என்கிறதெல்லாம் சொந்தங்கள் மூலம் தெரிஞ்சுகிட்டேன்’ என நினைவு கூர்கிறார் சைதன்யா.
நந்திகாமாவில் தன் பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, ஹைதராபாத் சென்று B.Sc (கம்ப்யூட்டர்) படிப்பை தொடர்ந்தார். “திருமணமான பிறகு, கல்பனா தத்தா பற்றிய கதை படித்தேன். இங்கிலாந்து அரசுக்கு எதிராக சிட்டகாங் பகுதியில் சுதந்திரத்துக்காக போராடிய முதல் தலைமுறை பெண் அவர்தான். அந்த இயக்கத்தில் பங்கேற்ற மற்ற பெண்களைப் பற்றி எழுதணும்னு தோணுச்சு. அதுதான் சிட்டகாங் புரட்சிகர பெண்கள்,” என்னும் சைதன்யா அந்த 10 பெண்களின் வாழ்க்கை வரலாற்றைப் பதிவு செய்ய பல பயன்களை மேற்கொண்டிருக்கிறார். சைதன்யா இதுவரை இரண்டு புத்தகங்களை எழுதியுள்ளார். ஒன்று ‘ சிட்டகாங் விபுல் வனிதா'( சிட்டகாங் புரட்சிகர பெண்கள்), மற்றொன்று ‘மானசசுலோ வென்னெலா’. மேலும் விஜயவிஹாரம் இதழில் சிறிது காலம் பணியாற்றினார். கணினி துறையில் பட்டம் பெற்றவர், ஆனால் என்னவோ அவர் மனம் எழுத்தின் பக்கமே நகர்ந்தது. ஹைதராபாத்தில் பிறந்த இவர் தனது எழுத்துகளின் வழியே தனது உணர்வுகளுக்கு வடிவம் கொடுத்தார்.
“இளம் வயதிலேயே இந்திய எழுத்துலகில் தனக்கென்று ஓர் இடத்தை உருவாக்கினார். இவரது எழுத்தால் ஈர்க்கப்பட்ட கல்யாண் கிருஷ்ணா தனது ‘நெலா டிக்கெட்’ படத்தில் எழுத்தாளராக சேர்த்துக்கொண்டார். ரவி தேஜா நடிப்பில் அந்தப் படமும் நல்ல வரவேற்பை பெற்றது. இதற்கிடையே இவரது புத்தகத்தை படித்த சேகர் கம்முலா முகநூலில் மிகப்பெரிய பாராட்டு பதிவு எழுதினார். தொடர்ந்து சேகர் கம்முலா தனது அனைத்து படங்களிலும் எழுத்தாளர் இவர்தான் என முடிவே செய்துவிட்டார். 2017ஆம் ஆண்டு ‘ஃபிடா’ திரைப்படத்தில் பாடலாசிரியராக அறிமுகமான சைதன்யா, “ஊசுபோடு” மற்றும் “ஃபிடா” போன்ற மெலடி பாடல்களை எழுதியிருந்தார். இந்தப் பாடல்கள் இப்போதும் டிரெண்ட். ‘லவ் ஸ்டோரி திரைப்படத்தில் “ஏய் பிள்ளா” உள்ளிட்ட பாடல்களுக்கு வரிகள் எழுதினார். தனுஷ் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் ‘குபேரா’ கதையின் கரங்களில் ஒருவர் தனியார்மயமாக்கல் அதனால் பாதிக்கப்படும் ஏழை மக்கள், அதை எதிர்த்துக் கேட்கும் சக குடிமகன் என இக்கதைக்கு தேவையான அரசியல் வசனங்களும் எழுதியிருக்கிறார் சைதன்யா.
சினிமா தொழில்நுட்பத் துறையில் குறிப்பாக எழுத்துப் பிரிவில் பெண்களின் பங்கு மிகக் குறைவாக இருப்பதற்கு காரணம் என்ன ? என்பது குறித்து சைதன்யா பேசுகையில் “திரைப்படத் துறை மற்ற வேலையை விட முற்றிலுமாகவே மாறுபட்டது. ஒரு பெண் மற்ற வேலைக்குச் சென்றால், அவள் எப்போது வேண்டுமானாலும் விடுமுறை எடுத்துக்கொள்ளலாம், திருமணம், குழந்தை இந்த காரணங்களுக்கு தற்காலிக ராஜினாமா கூட செய்து கொண்டு மீண்டும் வேலையில் சேரலாம். ஆனால் சினிமா அப்படி இல்லை. ஒருமுறை நமக்கென ஒரு இடத்தை உருவாக்கிவிட்டால் அதனை தக்க வைத்துக்கொள்ள தொடர்ந்து ஓடியே ஆக வேண்டும். அதனால்தான் பல பெண்கள் சினிமாத்துறையில் சேர விரும்புவ தில்லை. ஆனால் எனக்கு என்னுடைய கணவர் மற்றும் மகனின் ஆதரவு இருப்பதால் தொடர்ந்து பயணிக்க முடிகிறது’ என்னும் சைதன்யா இப்போதும் பெண்களுக்கு எதிராக என்ன குற்றம் நடந்தாலும் அதற்கு முதல் குரல் கொடுத்து வருகிறார்.
– ஷாலினி நியூட்டன்
The post ‘குபேரா’ படத்தின் எழுத்தாளர் இவர்தான்! appeared first on Dinakaran.