
சென்னை,
மத்திய அரசின் எரிவாயு திட்ட ஒப்பந்தத்தை பெறுவதற்காக ரூ.1 லட்சம் கோடியை சட்ட விரோதமாக கைமாற்ற தொழில் அதிபர் ஜிம் சர்ப் நினைக்கிறார். இதற்காக சிறையில் இருக்கும் முன்னாள் சிபிஐ அதிகாரியான நாகார்ஜுனாவின் உதவியை நாடுகிறார்.
சட்டவிரோத பரிவர்த்தனைக்காக கல்வி அறிவு இல்லாத தனுஷ் உள்ளிட்ட 4 பிச்சைக்காரர்களை நாகார்ஜுனா தேர்வு செய்கிறார். அவர்கள் பெயரில் தொழில் நிறுவனங்களை தொடங்கி கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுகிறார்.
ஒவ்வொரு பரிவர்த்தனை முடிந்த பின்பும் சம்பந்தப்பட்ட பிச்சைக்காரர்கள் கொலை செய்யப்படுகிறார்கள். இதற்கிடையில் தனுசை கொலை செய்வதற்காக அழைத்துச் செல்லப்படும்போது அவர் தப்பித்து விடுகிறார். எதிர்பாராத விதமாக பண பரிவர்த்தனையும் தடைபடுகிறது.
தனுஷ் உயிரோடு கிடைத்தால்தான் பணப்பரிவர்த்தனை முழுமை அடையும் என்பதால் அவரைத் தேடி நாகார்ஜுனா தலைமையில் குழுக்களாக பிரிந்து தேடுகிறார்கள்.
இதற்கிடையில் ஒரு ரெயில் நிலையத்தில் காதலனால் ஏமாற்றப்பட்டு அழுது கொண்டிருக்கும் ராஷ்மிகாவை, தனுஷ் சந்திக்கிறார். அதன் பிறகு ராஷ்மிகாவுடன் பயணிக்க வேண்டிய சூழலுக்கு தனுஷ் தள்ளப்படுகிறார்.
தனுஷ் என்ன ஆனார்? கொள்ளை கும்பலின் கையில் அவர் அகப்பட்டாரா? ராஷ்மிகாவின் நிலைமை என்ன ஆனது? என்ற பல்வேறு கேள்விகளுக்கு விடை சொல்கிறது மீதி கதை.
அழுக்கு படிந்த உடையும் கையில் குட்டி நாயுமாக பிச்சைக்காரனின் வாழ்க்கையை அப்படியே பிரதிபலித்திருக்கிறார் தனுஷ். சாப்பாடுக்காக கையேந்தும் ஒவ்வொரு இடங்களிலும் அவர் அனுதாபம் அள்ளுகிறார். மீண்டும் நடிப்பில் தனது முத்திரையை ஆழமாக பதித்துள்ளார்.
சோக முகமும் கண்ணீருமாக ராஷ்மிகா வித்யாசமான நடிப்பை கொட்டியுள்ளார். தனுசுடன் சேர்ந்து குப்பை மேட்டில் சுற்றித்திரிந்து தானும் நடிப்பில் கைதேர்ந்தவர் என்பதை நிரூபித்துள்ளார். இதுவரை பார்க்காத ரஷ்மிகாவை ரசிகர்கள் பார்ப்பது உறுதி.
சூழ்நிலைக்காக கொள்ளை கும்பலுடன் கைகோர்க்கும் நாகார்ஜுனாவின் நடிப்பு யதார்த்தம். கண்கள் மூலமாகவே வசனங்களை பேசியிருக்கிறார்.
ஜிம் சர்ப்பின் வில்லத்தனம் பயமுறுத்துகிறது. தமிழ் சினிமாவுக்கு நல்ல வில்லன் கிடைத்துள்ளார். பிச்சைக்காரராக வரும் பாக்கியராஜ், சுனைனா, நாசர், தலிப் தஹில் என அனைவருமே தங்கள் கதாபாத்திரங்களுக்கு சிறப்பு சேர்க்கிறார்கள்.
நிகேத் பொம்மிரெட்டியின் ஒளிப்பதிவு படத்துக்கு உயிரோட்டம் தருகிறது. தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை படத்துடன் ஒன்ற செய்கிறது. எதிர்பாராத திருப்பங்கள் கொண்ட விறுவிறுப்பான திரைக்கதை படத்துக்கு பலம். லாஜிக் மீறல்கள் பலவீனம்.
யாருமே யூகிக்க முடியாத கதையை, கடைசி வரை பரபரப்பு குறையாமல் காட்சிப்படுத்தி கவனம் ஈர்த்துள்ளார் இயக்குனர் சேகர் கம்முலா. கிளைமேக்ஸ் எதிர்பாராதது.