குன்றத்தூர் அருகே 9 சவரன் நகை திருடியவன் சிக்கினான்

3 months ago 21

குன்றத்தூர்: குன்றத்தூர் அருகே நந்தம்பாக்கம், கோதண்டம் சாலை, பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் சிவரஞ்சனி (32). கோவூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் கணக்காளராக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர், அதே பகுதியில் இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார். வழக்கம்போல், கடந்த மாதம் 27ம்தேதி கணவன் – மனைவி 2 பேரும் வீட்டை பூட்டிவிட்டு, வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினர்.

அப்போது, வீட்டின் பூட்டுகள் உடைக்கப்பட்டு, பீரோவை உடைத்து செயின், கம்மல் உள்ளிட்ட 9 சவரன் நகைகள் திருடுபோய் இருந்தன. இதனைகண்டு, அதிர்ச்சியடைந்த தம்பதியினர், இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், வழக்குப்பதிவு செய்த குன்றத்தூர் போலீசார், சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில், சிவரஞ்சனி வீட்டில் நகைகளை திருடிச்சென்றது திருவேற்காடு, யாதவர் தெருவை சேர்ந்த நரேந்திரன் (34) என்பது தெரியவந்தது. இதனையடுத்து, நேற்று தனது வீட்டில் பதுங்கியிருந்த நரேந்திரனை, போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். மேலும், அவனிடமிருந்து நகைகளை வாங்கி பதுக்கிய அவனது நண்பரான திருவேற்காடு, அயனம்பாக்கத்தை சேர்ந்த சரவணன் (எ) இராவணனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட நரேந்திரன் மீது ஆவடி, செவ்வாய்பேட்டை, வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய பல்வேறு காவல் நிலையங்களில் ஏற்கனவே ஏராளமான திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. மேலும், நரேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவனை ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post குன்றத்தூர் அருகே 9 சவரன் நகை திருடியவன் சிக்கினான் appeared first on Dinakaran.

Read Entire Article