காரைக்குடி: பிரசித்திபெற்ற குன்றக்குடி சண்முகநாதர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் 10ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே, குன்றக்குடியில் சண்முகநாதப் பெருமான் கோயில் அமைந்துள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக, ஆறுமுக கடவுள் உருவம் கொண்ட கொடிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. புனிதநீர் கலசங்களுடன் யாக பூஜை நடைபெற்றது.
பின்னர், சண்முகநாதர் சன்னதி முன்பு அமைந்துள்ள கொடிமரத்திற்கு சிறப்பு அபிசேகம் செய்யப்பட்டது. இதையடுத்து கொடியேற்றம், சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். பங்குனி உத்திர திருவிழா மொத்தம் 10 நாட்கள் நடைபெறும். திருவிழாவில் வரும் 10ம் ேததி தேரோட்டம் நடைபெறுகிறது. 11ம் தேதி பங்குனி உத்திரத்தன்று பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்துவந்து நேர்த்திக்கடன் செலுத்துவர்.
The post குன்றக்குடி முருகன் கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றம்: 10ம் தேதி தேரோட்டம் appeared first on Dinakaran.