குன்னூர் : குன்னூர் அருகே கட்டுப்பாட்டை இழந்து ஓடிய லாரி சாலையோரத்தில் நின்றிருந்த காரின் மீது மோதி 30 அடி உயரத்தில் அந்தரத்தில் தொங்கியவாறு நின்றது. கார் தலைகுப்புற கவிழ்ந்தது.நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் காய்கறி மண்டியை நோக்கி காய்கறி லோடு ஏற்ற லாரி காலியாக நேற்று சென்று கொண்டிருந்தது.
லாரியை ஊட்டி சேர்ந்த ஹரி என்பவர் ஓட்டி வந்துள்ளார். லாரி குன்னூர்-ஊட்டி சாலையில் பாய்ஸ் கம்பெனி அருகே சி.டி.சி. காலனி அருகே தாழ்வான பகுதியை நோக்கி வரும்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஓடியது. தொடர்ந்து குடியிருப்பு பகுதியின் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது லாரி மோதிது.
பின்னர் சாலையோர குடியிருப்பின் மேல் தளத்தில் சுமார் 30 அடி உயரத்தில் அந்தரத்தில் தொங்கியவாறு பாய்ந்து நின்றது. லாரி மோதியதால் கார் தூக்கி வீசப்பட்டு தலைகுப்புற கவிழ்ந்தது.
இந்த விபத்தில் லாரி டிரைவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு குன்னூர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
லாரி வீட்டின் மேல் அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்ததால், குன்னூர் தீயணைப்புத்துறையினர் வரவழைக்கப்பட்டனர். தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை மற்றும் போலீசார் உதவியோடு கிரேன் மூலம் லாரியை மீட்கும் பணிநடைபெற்றது. இந்த விபத்து குறித்து வெலிங்டன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் குன்னூர் – ஊட்டி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
The post குன்னூர் அருகே பரபரப்பு கார் மீது மோதி அந்தரத்தில் தொங்கிய லாரி appeared first on Dinakaran.