*அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
குன்னூர் : குன்னூர் அருகே கடந்த 20 ஆண்டாக நடைபாதை, கழிவுநீர் கால்வாய், தெருவிளக்கு என எந்தவொரு அடிப்படை வசதிகளும் இல்லாமல் நெடிகாடு கிராம மக்கள் தவித்து வருகின்றனர். எனவே கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து ஏற்படுத்தித்தர வேண்டும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே அதிகரட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட நெடிகாடு கிராமத்தில் சுமார் 50 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்த கிராமத்தில் வாழும் மக்கள், அடிப்படை வசதிகள் கிடைக்காமல் பெரும் சிரமமடைந்து வருவதாக புகார் தெரிவித்துள்ளனர். குறிப்பாக அப்பகுதியில் இரவு நேரங்களில் கரடி, சிறுத்தை போன்ற வன விலங்குகள் அதிகளவில் உலா வருவதாக கூறப்படும் நிலையில் அப்பகுதியில் இதுவரை தெருவிளக்குகள் பொருத்தப்படாததால் இரவு நேரங்களில் பணிகள் முடிந்து வீடு திரும்பும் மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். அதேபோல இதுவரை நடைபாதைகள் மற்றும் கழிவு நீர் கால்வாய்கள் ஏற்படுத்தாததால் கழிவு நீர் சாலையில் செல்கின்றன.
இதனால் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. மேலும் அப்பகுதி மக்கள் அதிகரட்டி பகுதிக்கு சுமார் 2 கிமீ தூரம் வரை நடந்து சென்று தான் நியாய விலை கடையில் பொருட்கள் வாங்கி வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர். எனவே கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து ஏற்படுத்தித்தர வேண்டும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post குன்னூர் அருகே கடந்த 20 ஆண்டுகளாக அடிப்படை வசதியின்றி தவிக்கும் கிராம மக்கள் appeared first on Dinakaran.