குன்னூரில் வெளுத்து வாங்கிய கன மழையால் சாலையில் மரம் விழுந்தது

12 hours ago 1

*ஆம்புலன்ஸ் செல்ல முடியாமல் தவிப்பு

குன்னூர் : குன்னூரில் வெளுத்து வாங்கிய கன மழையால் பர்லியார் பகுதியில் மரம் விழுந்தது. இதனால் அவ்வழியாக நோயாளிகளுடன் ஆம்புலன்ஸ் செல்ல முடியாமல் தவித்ததுடன், சுற்றுலா பயணிகளும் நடுக்காட்டில் தவித்தனர்.

தென்னிந்திய பகுதிகளின் வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கவுள்ளதால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் அடிப்படையில் நீலகிரி மாவட்டம் குன்னூர் நகரப்பகுதிகள் மட்டுமல்லாமல் அதன் சுற்று வட்டார பகுதிகளான காட்டேரி, அலுவங்காடு, எடப்பள்ளி போன்ற பகுதிகளில் நேற்று மதியத்திற்கு கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் குன்னூர் நகர பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

அதேபோல பர்லியார் பகுதியில் 2 மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்தது. இந்த மழை காரணமாக ஆங்காங்கே மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதை தொடர்ந்து பர்லியார் சோதனை சாவடி அருகே பெரிய அளவிலான மரம் ஒன்று சாலையில் விழுந்தது.

இந்த சம்பவம் அறிந்த மலைப்பாதை ரோந்து பணி காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று இருபுறமும் போக்குவரத்து நிறுத்தி, குன்னூர் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர்.

இதற்கிடையே குன்னூரில் இருந்து கோவை மருத்துவமனைக்கு நோயாளிகளை அழைத்து சென்ற 2 ஆம்புலன்ஸ்கள் நடுவழியில் சிக்கிக்கொண்டது. மேலும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்கு தாமதம் ஆனதை தொடர்ந்து, காவல் துறையினர், வாகன ஓட்டிகள் மற்றும் பர்லியார் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் இணைந்து சாலையின் குறுக்கே விழுந்த மரத்தை வெட்டி அகற்றி ஆம்புலன்ஸ் செல்ல வழி ஏற்படுத்தினர்.

இதனால் குன்னூர் – மேட்டுப்பாளையம் மலைபாதையில் 2 மணி நேரத்திற்கு மேலாக சுமார் 5 கிமீ வரை வாகனங்கள் அணிவகுத்த நிலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக அப்பகுதியில் உள்ள மின் கம்பம் மீது மரம் விழுந்ததால் மின்கம்பிகள் அறுந்து, மின் கம்பம் வளைந்த நிலையில் காட்சியளித்தது. இதற்கிடையே சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பால் சுற்றுலா பயணிகள் நடுக்காட்டில் சிக்கி தவித்தனர்.

The post குன்னூரில் வெளுத்து வாங்கிய கன மழையால் சாலையில் மரம் விழுந்தது appeared first on Dinakaran.

Read Entire Article