*விவசாயிகள் கோரிக்கையை ஏற்று கலெக்டர் உத்தரவு
நாகர்கோவில் : குன்னத்தங்குளம், கல்படிகுளம், வண்ணான்குளம் ஆகிய குளங்களில் உள்ள மடைகளை சரிசய்து, தூர்வாரவேண்டும் என கலெக்டரிடம் கல்படி ஏலா விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். அதன்படி உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ, கும்பப்பூ என இருபோக சாகுபடி நடந்துவருகிறது. சாகுபடி நிலங்கள் ஆற்றுப்பாசனம், குளத்து பாசனத்தை நம்பி பயன் அடைந்து வருகின்றன.
குமரி மாவட்டத்தில் சானல்கள், கால்வாய்கள் சரியாக தூர்வாராமலும், போதிய பராமரிப்பு இல்லாமலும் பல சானல்கள் ஆக்ரமிப்பு பிடியில் சிக்கியுள்ளன. சானல்கள், குளங்களில் உள்ள மடைகள் உரிய பராமரிப்பு இல்லாமல், தண்ணீர் வீணாகும் நிலை நீடித்து வருகிறது. இதனால் குளங்களில் தண்ணீரை தேக்கி வைக்க முடியாத நிலையுடன், பயிர்கள் அழியும் நிலையும் ஏற்பட்டு வருகிறது.
குமரி மாவட்டத்தில் கல்குளம் தாலுகா பகுதியில் வெள்ளிமலை அருகே கல்படி ஏலா(வயல் பரப்பு) உள்ளது. சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் இந்த ஏலா அமைந்துள்ளது.
இந்த ஏலாவிற்கு அதனை ஓட்டியுள்ள குன்னத்தாங்குளம், கல்படி குளம், வண்ணான்குளம் ஆகிய 3 குளங்கள் மூலம் பாசன வசதி கிடைக்கிறது.
பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து திறந்துவிடப்படும் உபரி நீர் மற்றும் மழை நீர் வள்ளியாறு மூலம் வருகிறது. இந்த தண்ணீர் இரணியல் அருகே உள்ள பள்ளம்பாலத்தில் உள்ள தடுப்பணை மூலம் குன்னத்தாங்குளம், கல்படி குளம், வண்ணான்குளத்திற்கு வருகிறது.
தற்போது இந்த ஏலாவில் கும்பப்பூ சாகுபடி பணி நடந்துள்ளது. இன்னும் 20 நாட்களில் இருந்து 25 நாட்களில் அறுவடை பணி தொடங்கவுள்ளது. இந்த 3 குளங்களில் இருந்து 5 மடைகள் மூலம் வயல்களுக்கு தண்ணீர் கிடைத்து வருகிறது. மடைகள் போதிய பராமரிப்பு இல்லாமல் மடைவழியாக நீர் கசிவு இருந்து வருகிறது. இதனால் அறுவடை காலங்களில் விவசாயிகள் பலத்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
மேலும் குன்னத்தாங்குளம், கல்படி குளம், வண்ணான்குளம் ஆகிய 3 குளங்களும் புதர் மண்டி கிடைக்கிறது. இதனால் தண்ணீரும் மாசடைந்து உள்ளது. இந்த நிலையில் கலெக்டர் அழகுமீனா நேற்று காலை கல்படி ஏலா பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அந்த பகுதியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சுரேஷ் கலெக்டரிடம் ஒரு கோரிக்கை வைத்தார். இந்த குளங்கள் மூலம் வயல்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்த குளங்களை கடந்த காலங்களில் மக்கள் குளிப்பதற்கு பயன்படுத்தி வந்தனர். தற்போது புதர்கள் மண்டி கிடப்பதால், மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
புதர்களை அகற்றி குளத்தில் தேங்கியுள்ள வண்டல் மண்ணை அகற்ற வேண்டும் என்றார். கோரிக்கையை ஏற்ற கலெக்டர் அழகுமீனா, இந்த குளங்களில் புதர்களை அகற்றி தூர்வார நடவடிக்கை எடுக்க வருவாய்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தேவைப்படும் விவசாயிகள் வண்டல்மண்ணை எடுக்கவும் அறிவுரை வழங்கினார்.
பாதை வசதி இல்லை
விவசாயி சக்திவேல் மற்றும் விவசாயிகள் கலெக்டரிடம், குளங்களில் உள்ள மடைகளில் நீர்கசிவு ஏற்பட்டு வருகிறது. இந்த நீர்கசிவை போக்கும் வகையில் அனைத்து குளத்தில் இருந்து வயல்களுக்கு செல்லும் மடைகளையும் சீரமைத்து கொடுக்க வேண்டும்.
அதுபோல் வயல்களுக்கு ஒரு புறத்தில் இருந்து மறுபுறத்திற்கு செல்ல போதிய பாதை வசதி இல்லை. இதனால் விவசாயிகள் பலத்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். புறம்போக்கு பாதையில் சாலை அமைத்துதர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். கோரிக்கையை கேட்டறிந்த கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
The post குன்னத்தாங்குளம், கல்படிகுளம், வண்ணான்குளம் மடைகளை சரிசெய்து தூர்வார நடவடிக்கை appeared first on Dinakaran.