குத்துச்சண்டை சம்மேளன நிர்வாகிகள் தேர்தல் தாமதம்: உண்மை நிலையை கண்டறிய 3 பேர் கமிட்டி அமைப்பு

4 hours ago 2

புதுடெல்லி,

இந்திய குத்துச்சண்டை சம்மேளன நிர்வாகிகளின் பதவி காலம் கடந்த பிப்ரவரி 2-ந்தேதியுடன் முடிவடைந்தது. புதிய நிர்வாகிகள் தேர்தலை மார்ச் 28-ந்தேதி நடத்த திட்டமிடப்பட்டது. அதன் பிறகு சட்டபிரச்சினை, மேல்முறையீடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நிர்வாகிகள் தேர்தல் தள்ளிகொண்டே போகிறது. குத்துச்சண்டை சம்மேளனத்தின் அன்றாட பணிகளை இடைக்கால கமிட்டி கவனிக்கிறது.

இந்த நிலையில் இந்திய குத்துச்சண்டை நிர்வாகிகள் தேர்தலின் தாமதத்துக்கு உண்மையான காரணம் என்ன என்பதை கண்டறிய 3 பேர் கொண்ட கமிட்டியை இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (ஐ.ஓ.ஏ.) தலைவர் பி.டி. உஷா அமைத்துள்ளார். ஐ.ஓ.ஏ பொருளாளர் சக்தேவ் யாதவ் தலைமையிலான இந்த கமிட்டியில் நிர்வாக கவுன்சில் உறுப்பினர் பூபேந்தர் சிங் பஜ்வா, வழக்கறிஞர் பாயல் கக்ரா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இவர்கள், சட்டசிக்கல் மற்றும் குத்துச்சண்டை நிர்வாகத்தின் தற்போதை நிலை என்ன? தேர்தல் இழுபறிக்கு காரணம் என்ன? அதனால் குத்துச்சண்டை பணிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பு, இந்த சிக்கலை தீர்க்க எத்தகைய நடவடிக்கை தேவை என்பதை ஆராய்ந்து ஒரு வாரத்திற்குள் அறிக்கையாக சமர்ப்பிப்பார்கள். அதன் பிறகு இந்த விவகாரத்தில் இந்திய ஒலிம்பிக் சங்கம் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளும். இதற்கிடையே, குத்துச்சண்டை நிர்வாக பணிகளை கவனிக்கும் இடைக்கால கமிட்டி அடுத்த மாதம் 31-ந்தேதிக்குள் நிர்வாகிகள் தேர்தலை நடத்துவதாக உறுதி அளித்துள்ளது.

Read Entire Article