குண்டும் குழியுமான மாநில நெடுஞ்சாலை: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

1 day ago 1

 

திருத்தணி: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிப்பட்டு அருகே, கொசத்தலை ஆற்றிலிருந்து நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ.45 கோடி மதிப்பீட்டில் 6 நீர் உறிஞ்சி கிணறுகள் அமைத்து, பைப் லைன்கள் மூலம் தினமும் 2.76 பில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட உள்ளது. தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் ஆர்.கே.பேட்டை மற்றும் திருத்தணி ஒன்றியங்களில் உள்ள எஸ்.விஜிபுரம், ஆர்கே.பேட்டை, வங்கனூர் ஜிசிஎஸ் கண்டிகை, எஸ்.அக்ரஹாரம், செருக்கனூர், தாடூர், கன்னிகாபுரம், கார்த்திகேயபுரம் ஆகிய ஊராட்சிகளுக்கு குடிநீர் வழங்கும் பணிகள் கடந்த ஓராண்டுக்கு மேலாக நடைபெற்று வருகிறது.

இதற்காக பள்ளிப்பட்டு அருகே கொசஸ்தலை ஆற்றில் நீர் உறிஞ்சி கிணறுகள் அமைத்து பைப் லைன்கள், ஆங்காங்கே மேல்நிலை நீர் தேக்கத் தொட்டிகள் அமைக்கப்பட்டு வருகிறது. பைப் லைன் அமைக்க பள்ளிப்பட்டு-ஆர்கே பேட்டை மாநில நெடுஞ்சாலையில், கிராம சாலைகளில் பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டு பைப் லைன் அமைக்கப்படுகிறது. இதனால், மாநில நெடுஞ்சாலை சேதம் அடைவதோடு, சாலையை முறையாக சீரமைக்காமல் விட்டுவிட்டு செல்வதால், குண்டும் குழியுமாக மாறி விபத்துகள் ஏற்படும் அபாயம் நிலவுகிறது.

மேலும் அத்திமாஞ்சேரிபேட்டையில் உள்ள மாநில நெடுஞ்சாலையில் பஜாரில் சாலை தோண்டப்பட்டு ஜல்லி கற்கள், மண் தூசி துகள்களுடன் விடப்பட்டுள்ளதால், வீடுகளில் தூசி பறந்து வாகன ஓட்டிகள் மற்றும் சாலையில் நடந்து செல்வோர் கண்களில் தூசி விழுந்து, கண் எரிச்சல் மற்றும் உடல்நல கேடு ஏற்படுகிறது. எனவே, கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

The post குண்டும் குழியுமான மாநில நெடுஞ்சாலை: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article