குண்டும் குழியுமான சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையில் சுங்க கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும்: ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரிக்கு திமுக எம்பி தயாநிதி மாறன் கடிதம்

3 months ago 21

சென்னை: ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு மக்களவை திமுக துணை தலைவரும் மத்திய சென்னை எம்பியுமான தயாநிதி மாறன் கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: கடுமையான சேதத்திற்கு உள்ளாகி இருக்கும் சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையின் (என்எச்48) பரிதாப நிலை பற்றி, திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி உங்களுடைய கவனத்துக்கு கொண்டுவரவே இதை எழுதுகிறேன்.

கடந்த ஆண்டு பிப்ரவரி 9ம் தேதி இது குறித்து கேள்வி எழுப்பிய போதும் நிலைமை இன்னும் மாறாமல் உள்ளது. சாலை குண்டு குழியுமாகவும்,மேடு பள்ளமாகவும் இருக்கிறது. பல இடங்களில் கட்டுமான பணிகளும் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதால் அந்த சாலையில் பயணிப்பவர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். இந்த நெடுஞ்சாலையை சீரமைப்பது தொடர்பாக உங்களிடம் பல முறை கோரிக்கை விடுத்திருந்தேன். ஆனால், சமீபத்தில் இந்த வழியே பயணித்த போது தான் சாலையின் நிலைமையை பார்த்து கடும் வேதனை அடைந்தேன்.

இந்த சாலையின் மோசமான நிலைமை குறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினும் உங்களுக்கு ஏற்கனவே கடிதம் எழுதியுள்ளார். சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் சமீபத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு தான் சுற்றுபயணம் செல்லும் போது சாலை மார்க்கமாக செல்வதற்கு பதில் ரயில் மூலம் சென்றதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். இந்த சாலை என்பது சென்னை மற்றும் அதன் துறைமுகங்களில் இருந்து காஞ்சிபுரம், வேலுார், ராணிப்பேட்டை, ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரியில் உள்ள தொழில்துறை மையங்களுக்கு முக்கிய இணைப்பாக விளங்குகிறது.

சென்னையில் இருந்து இந்த தொழிற்சாலை மையங்களுக்கு பொருட்களை கொண்டு செல்வதற்கு என்எச்.48 நெடுஞ்சாலை மிகுந்த அத்தியாவசியமாக இருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த சாலையில் போதுமான பராமரிப்பு மற்றும் கட்டுமான பணிகள் இழுத்தடிக்கப்பட்டு வருவது பொதுமக்கள் மற்றும் தொழிற்சாலை துறையினருக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் தேசிய நெடுஞ்சாலை ஆணைய பணிகளுக்கு விதிவிலக்கு அளிப்பது, நிலம் கையெடுப்புகளுக்கு உதவி, வனத்துறையின் அனுமதி கொடுப்பது என அனைத்து விதமான உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது. ஆனால் ஸ்ரீபெரும்புதுாரில் இருந்து வாலாஜாபேட்டை பிரிவு வரை 6 வழி சாலையாக மாற்றும் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் சாலையில் ஆங்காங்கே குண்டு குழியுமாகவும், மேடு பள்ளமாகவும் இருக்கிறது.

தற்போதுள்ள நிலைமையில் அந்த சாலையில் தொடர்ந்து சுங்க கட்டணம் வசூலிப்பது நியாயமற்றது. சேவைகள் அளிக்கப்படவில்லை என்பது தெளிவாக தெரிந்தபோதும் அதில் பயணிப்போரிடம் இருந்து சுங்க கட்டணம் தொடர்ந்து வசூலிக்கப்பட்டு வருகிறது. முறையான பராமரிப்புடன் உள்ள சாலைகளில் இருந்து கட்டணம் வசூலிக்கலாம். ஆனால் இந்த சாலையின் தரம் மிக மோசமாக உள்ளது. என்.எச்.48 நெடுஞ்சாலையில் உள்ள பிரச்னைகளுக்கு உடனே நடவடிக்கை எடுத்து சாலையை உடனே செப்பனிட நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த சாலை பாதுகாப்பானதாக, நல்ல நிலைமைக்கு கொண்டு வரும் வரை அதில் சுங்க கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன். இவ்வாறு அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

The post குண்டும் குழியுமான சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையில் சுங்க கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும்: ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரிக்கு திமுக எம்பி தயாநிதி மாறன் கடிதம் appeared first on Dinakaran.

Read Entire Article