குட்டையில் மூழ்கி 3 வயது குழந்தை பரிதாப பலி

1 week ago 3

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தை அடுத்த வேளியூர் ஊராட்சியை சேர்ந்தவர் கார்த்திக். இவர், டைல்ஸ் ஒட்டும் பணி செய்து வருகிறார். இவருடைய மனைவி கார்த்திகா. இந்த, தம்பதிக்கு 3 வயதில் சுவிக்க்ஷா என்ற பெண் குழந்தை இருந்தது. இவர்கள், வீட்டிற்கு உறவினர்கள் வந்திருந்ததால் மதியம் வீட்டில் உள்ள அனைவரும் உணவு அருந்திவிட்டு பேசிக்கொண்டிருந்தனர்.

அந்த, நேரத்தில் அருகில் விளையாடிக்கொண்டிருந்த சுவிக்க்ஷாவை பெற்றோர் உள்ளிட்ட யாரும் கவனிக்க தவறிவிட்டனர். இந்நிலையில், வீட்டின் அருகே சுமார் 30 மீட்டர் தூரத்தில் உள்ள ஒரு குட்டை அருகே விளையாடிக்கொண்டிருந்த சுவிக்க்ஷா, யாரும் கவனிக்காத நேரத்தில் திடீரென குட்டையில் விழுந்துள்ளார். நீண்ட நேரம் ஆகியும் குழந்தையை காணாததால் உறவினர்கள் மற்றும் பெற்றோர் தேடிக் கொண்டிருந்தபோது, குட்டையில் குழந்தை விழுந்து மூர்ச்சையாகி உள்ளதை கண்டறிந்தனர்.

உடனே, 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு குழந்தையை மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு, குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டது என தெரிவித்ததால் பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுதனர். காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.

The post குட்டையில் மூழ்கி 3 வயது குழந்தை பரிதாப பலி appeared first on Dinakaran.

Read Entire Article