
சென்னை,
அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படம் வெளியாக இன்னும் 9 நாட்களே உள்ள நிலையில் படத்தின் மீதான ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துக்கொண்டே போகிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் 10-ம் தேதி வெளியாக உள்ளது.
இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடலான 'ஓஜி சம்பவம்' பாடல் வெளியாகி வைரலானது. அதனை தொடர்ந்து 2-வது பாடலான 'காட் பிளஸ் யூ' வெளியாகி வைரலாகி வருகிறது. ஜி.வி பிரகாஷ் இசையில் இந்த பாடலை அனிருத் பாடியுள்ளார்.
'குட் பேட் அக்லி' படத்தின் டிரெய்லர் வெளியாகி 24 மணி நேரத்தில் 3.2 கோடி பார்வைகளைக் கடந்து ஒரே நாளில் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் டிரெய்லர் என்ற பெருமையைப் இது பெற்றிருக்கிறது.
கடந்த சில ஆண்டுகளாகவே தமிழகத்தை பொறுத்தவரை, முதல் காட்சி 9 மணிக்கு மட்டுமே திரையிடப்படுகிறது. ஆனால் அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் புதுச்சேரியில் அதிகாலை 4 மணி, 7.30 மணிக்கு வெளியாவதால், தமிழகத்தில் திரைப்படம் திரையிடுவதற்கு முன்பே விமர்சனங்கள் வெளிவருகின்றன.ஒருவேளை பாசிட்டிவ் விமர்சனம் என்றால் படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்படுத்தும். ஆனால் எதிர்மறை விமர்சனங்கள் வந்தால், தமிழ்நாட்டில் படத்தின் வசூலுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் திரையிடப்படும் 9 மணிக்குதான் மற்ற மாநிலங்களிலும் திரையிடப்படும் என அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. எனவே, கேரளா, கர்நாடகா உட்பட அண்டை மாநிலங்களின் அதிகாலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், முதல் காட்சி கர்நாடகத்தில் 8.30 மணிக்கும் கேரளாவில் 9 மணிக்கும் தொடங்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனவே, உலகம் முழுவதும் 'குட் பேட்' திரைப்படம் தமிழ்நாட்டுக்காக அதிகாலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.