குடும்ப பிரச்னை காரணமாக செல்போன் டவரில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல்

3 months ago 18

*2.30 மணி நேரத்திற்கு பின் மீட்பு

விளாத்திகுளம் : குடும்ப பிரச்னை காரணமாக விளாத்திகுளத்தில் செல்போன் டவரில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல் விடுத்தார். போலீசார், தீயணைப்பு படையினர் பேச்சுவார்த்தை நடத்தி 2.30 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அவரை மீட்டனர். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரம் கவுண்டன்பட்டியை சேர்ந்தவர் மகாலிங்கம் (30). கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி முத்துமாரி. குடும்ப பிரச்னை காரணமாக முத்துமாரி, தனது 2 ஆண் குழந்தைகளுடன் கீழவிளாத்திகுளத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.

மகாலிங்கம் கோவையில் வேலை பார்த்துக் கொண்டு அவ்வப்போது கீழவிளாத்திகுளம் வந்து மனைவி மற்றும் குழந்தைகளை பார்த்துவிட்டு சென்றுள்ளார். தற்போது மகாலிங்கம் கீழவிளாத்திகுளத்தில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். எனினும் தம்பதியினர் இடையே குடும்ப பிரச்னை இருந்து வந்துள்ளது. நேற்று முன்தினம் இரவும் இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது.

இந்நிலையில் நேற்று காலை 8 மணியளவில் விளாத்திகுளம் – வேம்பார் சாலையில் தீயணைப்பு நிலையம் அருகே உள்ள சுமார் 130 அடி உயரம் கொண்ட தனியார் செல்போன் டவரில் மகாலிங்கம் திடீரென ஏறினார். இதனை பார்த்த தீயணைப்பு துறையினர் ஓடி வந்துள்ளனர். ஆனால் மகாலிங்கம் அதற்குள் செல்போன் டவரின் உயரமான பகுதிக்கு ஏறிச்சென்று விட்டு, தன்னை மீட்க டவர் மீது யாரும் ஏறினால் கீழே குதித்து விடுவேன் என்று தற்கொலை மிரட்டல் விடுத்தார்.

தகவலறிந்து சுற்றுப்பகுதி மக்கள் அங்கு திரண்டனர். விளாத்திகுளம் இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையிலான போலீசாரும் விரைந்து வந்தனர். போலீசாரும், தீயணைப்பு துறையினரும் மகாலிங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அவரது மனைவி முத்துமாரி மற்றும் குழந்தைகளும் வந்து மைக்கில் மகாலிங்கத்திடம் பேசினர். அப்பா கீழே இறங்கி வாங்க என்று மகன் பேசியதை கேட்டு மகாலிங்கம், டவரில் அமர்ந்து அழத் தொடங்கினார். ஆனாலும் அவர், டவரில் இருந்து இறங்காமல் தொடர்ந்து அடம் பிடித்தார். மேலும் அடிக்கடி கீழே குதித்து விடுவதாக மிரட்டல் விடுத்துக் கொண்டே இருந்தார்.

சுமார் 2.30 மணி நேர போராட்டத்திற்கு பிறகு காலை 10.50 மணிக்கு மகாலிங்கம், செல்போன் டவரில் இருந்து கீழே இறங்கினார். போலீசார், மகாலிங்கத்தை காவல் நிலையம் அழைத்துச் சென்று அறிவுரை வழங்கினர். அவரது மனைவி மற்றும் குடும்பத்தினருக்கும் ஆலோசனைகளை வழங்கினர். சம்பவ இடத்தில் 108 ஆம்புலன்சும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்தப்பட்டிருந்தது.

The post குடும்ப பிரச்னை காரணமாக செல்போன் டவரில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல் appeared first on Dinakaran.

Read Entire Article