குடியிருப்பு பகுதியில் புகுந்து சரமாரி தாக்கிய கும்பல் பெண்கள் உட்பட 5 பேர் படுகாயம் பஸ்சில் சென்ற இளைஞர்கள் இடையே தகராறு

6 months ago 17

குடியாத்தம், நவ.13: குடியாத்தம் அருகே பஸ்சில் சென்ற இளைஞர்கள் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இதில், ஒருதரப்பினர் குடியிருப்பு பகுதியில் புகுந்து சரமாரிய தாக்கியதில் பெண்கள் உட்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த பெரும்பாடி கிராமத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் ஒரு சமூகத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமம் வழியாக தனியார் மற்றும் அரசு பஸ் சென்று வருகிறது. இந்நிலையில், நேற்று மாலை குடியாத்தம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து சென்ற தனியார் பஸ்ஸில் பயணம் செய்த பெரும்பாடி கிராமத்தை சேர்ந்த இளைஞருக்கும் குடியாத்தம் அடுத்த அக்ரஹாரம் கிராமத்தை சேர்ந்த இளைஞருக்கும் இடையே திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டது.

இதில், ஆத்திரம் அடைந்த அக்ரஹாரம் கிராமத்தை சேர்ந்த இளைஞர் தனது ஆதரவாளர்கள் 50க்கும் மேற்பட்டோரை ஆயுதங்களுடன் அழைத்துக்கொண்டு, பெரும்பாடி கிராமத்திற்குள் நுழைந்து அங்கிருந்த இளைஞர்கள் மற்றும் பெண்களை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பிச்சென்றதாக கூறப்படுகிறது. இதில், படுகாயம் அடைந்த பெரும்பாடி கிராமத்தை சேர்ந்த பெண்கள் உட்பட 5க்கும் மேற்பட்டோர் குடியாத்தம் தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து தகவலறிந்த குடியாத்தம் டவுன் மற்றும் தாலுகா போலீசார், பேரணாம்பட்டு போலீசார் பெரும்பாடி கிராமத்திற்கு விரைந்து சென்று அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தினர். இதற்கிடையில், அப்பகுதி மக்கள் பெரும்பாடி- அக்ரஹாரம் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது, குடியிருப்பு பகுதியில் புகுந்து தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தினர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து செல்ல செய்தனர். ஆனாலும், அசம்பாவிதத்தை தவிர்க்க அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post குடியிருப்பு பகுதியில் புகுந்து சரமாரி தாக்கிய கும்பல் பெண்கள் உட்பட 5 பேர் படுகாயம் பஸ்சில் சென்ற இளைஞர்கள் இடையே தகராறு appeared first on Dinakaran.

Read Entire Article