
குடியாத்தத்தில் பிரசித்தி பெற்ற கெங்கையம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. கடந்த 14-ந் தேதி தேர்த் திருவிழாவும், 15-ந் தேதி கெங்கையம்மன் சிரசு திருவிழாவும் நடந்தது.
இதன் தொடர்ச்சியாக நேற்று இரவு குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் அருகே கோபாலபுரம் இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக சங்கத்துடன் கூடிய அங்காள பரமேஸ்வரி அம்மன் அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கு நகரின் முக்கிய வீதிகள் வழியாக விடிய விடிய உலா வந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் விடிய விடியக் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் பல்லக்கில் அமைக்கப்பட்டிருந்த விதவிதமான அலங்காரங்களில் அம்மனை வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி சிவக்குமார், ஊர் நாட்டாமை ஆர்.ஜி.சம்பத், கவுரவ தர்மகர்த்தா கே.பிச்சாண்டி, திருப்பணிக்குழுவை சேர்ந்த ஆர்.ஜி.எஸ்.கார்த்திகேயன் மற்றும் இளைஞர் அணியினர், விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
இதேபோல் குடியாத்தம் தரணம்பேட்டை புஷ்ப வியாபாரிகள் சங்கம் சார்பில் 69-ம் ஆண்டு பூப்பல்லக்கு நிகழ்ச்சி நடைபெற்றது. குடியாத்தம் கண்ணகி தெரு காளியம்மன் கோவில் அருகே அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கு நகரின் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்தது. இந்தப் பல்லக்கில் சிறப்பம்சமாக முதலில் சிறிய பல்லக்கு செய்யப்பட்டு அதில் 14அடி உயரத்தில் லட்சுமி பெருமாள், 25 முகங்களுடன் சதாசிவ மூர்த்தி, மற்றும் சரஸ்வதி சக்தி லட்சுமி சிவலிங்கம் அலங்காரம் செய்யப்பட்டு உலா வந்தது.
ஏற்பாடுகளை குடியாத்தம் புஷ்ப வியாபாரிகள் சங்க தலைவர் எம்.டி.ராமலிங்கம், துணைத்தலைவர் டி.கே.எஸ்.நாராயணசாமி செயலாளர் வி.சி.என்.சந்திரசேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.
மற்றுமொரு பூப்பல்லக்கு குடியாத்தம் அகமுடைய முதலியார் சங்கம் சார்பில் காசி விஸ்வநாதர் ஆலயம் அருகே அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் மகாலட்சுமி ராஜராஜேஸ்வரி அம்மன் உருவங்கள் வைக்கப்பட்டிருந்தது. நகரின் முக்கிய வீதிகள் வழியாக அந்த பூப்பல்லக்கு விடிய விடிய உலா வந்தது.
நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவர் எம்.ஏ.கே. சீனிவாசன், செயலாளர் ஜி.மணிவண்ணன், சங்க ஆலோசகர் வக்கீல் கே.எம்.பூபதி, பொருளாளர் ஹரிஆறுமுகம் உள்ளிட்டோர் தலைமை தாங்கினர்.
சிறப்பு அழைப்பாளர்களாக குடியாத்தம் அமலுவிஜயன் எம்.எல்.ஏ., நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன், ஒன்றிய தி.மு.க. செயலாளர் கள்ளூர்ரவி, அ.தி.மு.க. நகர செயலாளர் ஜே.கே.என்.பழனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.