டெல்லி :காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பஹ்லகாமில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி பொது மக்கள் பலியாகினர்.இதையடுத்து, பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்திய ராணுவம் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 9 தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. பாகிஸ்தானில் உள்ள 4 தீவிரவாத முகாம்கள், பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 5 முகாம்கள் அழிக்கப்பட்டன.இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் 100 தீவிரவாதிகள் வரை உயிரிழந்திருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், பாகிஸ்தான் – நேபாள எல்லையோர மாநிலங்களின் முதல்வர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உயர்மட்ட ஆலோசனை மேற்கொண்டார். ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத், உத்தராகண்ட், உத்தர பிரதேசம், பீகார், சிக்கிம், மேற்கு வங்கம் ஆகிய மாநில முதல்வர்கள், ஆளுநர்கள், மாநில உள்துறை செயலாளர்கள், டிஜிபிக்கள் உள்ளிட்டோரிடம் அமித்ஷா அவசர ஆலோசனை நடத்தினார். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எந்த சூழலையும் எதிர்க்கொள்ளும் வகையில், தயார் நிலையில் இருப்பது, மக்களை பாதுகாக்கும் பணிகள் குறித்தும் ஆலோசனை நடத்தினார்.
இதனிடையே விடுப்பில் சென்றுள்ள ராணுவ வீரர்கள் உடனே பணிக்கு திரும்ப ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை அடுத்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு மேற்கொண்டார். இந்திய ராணுவம் நடத்திய துல்லிய தாக்குதல் குறித்து குடியரசுத் தலைவரிடம் விளக்கம் அளித்தார் பிரதமர் மோடி. மேலும் அடுத்தடுத்து எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகள் குறித்து குடியரசு தலைவரிடம் மோடி விரிவாக எடுத்துரைத்தார்.
The post குடியரசுத் தலைவருடன் பிரதமர் மோடி சந்திப்பு, மாநில முதலமைச்சர்களுடன் அமித்ஷா அவசர ஆலோசனை : போர் பதற்றத்தில் இந்தியா!! appeared first on Dinakaran.