குடியரசு தினவிழாவில் பங்கேற்க இந்தியா வந்தார் இந்தோனேசிய ஜனாதிபதி

3 hours ago 1

புதுடெல்லி,

இந்தியாவின் 76வது குடியரசு தினம் வரும் 26ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. குடியரசு தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றப்படும். மேலும், ராணுவ அணிவகுப்பும் நடைபெறும். குடியரசு தின விழாவில் வெளிநாடுகளை சேர்ந்த தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்பது வழக்கம்.

அந்த வகையில் இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் இந்தோனேசிய ஜனாதிபதி பிரபோவா சுபியாண்டோ சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்வார் என மத்திய அரசு அறிவித்திருந்தது. 73 வயதான அவர் முன்னாள் ராணுவ தளபதி ஆவார். கடந்த அக்டோபர் மாதம் அவர் ஜனாதிபதியாக பொறுப்பேற்றார்.

இந்நிலையில், குடியரசு தினவிழாவில் கலந்து கொள்வதற்காக இந்தோனேசிய ஜனாதிபதி பிரபோவா சுபியாண்டோ நேற்று (ஜன. 23) இரவு டெல்லி வந்தடைந்தார். அவரை வெளியுறவுத்துறை இணை மந்திரி பபித்ரா மார்கிரெட்டா உற்சாகமாக வரவேற்றார். டெல்லி வந்துள்ள இந்தோனேசிய ஜனாதிபதி சுபியாண்டோ பிரதமர் மோடி, ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜகதீப் தங்கர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரை சந்தித்து பேசுகிறார்.

இன்று மாலை தாஜ் ஓட்டலில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை சந்திக்கிறார். இதைத் தொடர்ந்து, ராஷ்டிரிய பவனில் நாளை (ஜன.,25) காலை 10 மணிக்கு நடக்கும் வரவேற்பு நிகழ்ச்சியில் இந்தோனேசிய பிரதமர் பிரபோவோ சுபியாண்டோ பங்கேற்கிறார்.

இந்திய சுற்றுப்பயணம் குறித்து இந்தோனேசிய ஜனாதிபதி கூறுகையில்,

இந்தியாவின் 76வது குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் பங்கேற்கின்றேன். இந்தப் பயணத்தின் போது, பிரதமர் மோடியை சந்திக்க உள்ளேன். அப்போது, பாதுகாப்பு, கடல்சார் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப மேம்பாடு குறித்து ஒத்துழைப்பை வலுப்படுத்துவது பற்றி ஆலோசனை நடத்த உள்ளேன் என்றார்.

இந்திய பயணத்தை முடித்துக் கொண்டு, இந்தோனேசிய பிரதமர் பிரபோவோ சுபியன்டோ மலேசியா புறப்பட்டு செல்கிறார். கடந்த ஆண்டு நடைபெற்ற குடியரசு தினவிழா நிகழ்ச்சியில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article