நாகப்பட்டினம், ஜன.26: குடியரசு தினத்தை முன்னிட்டு நாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் பயணிகளிடம் ரயில்வே போலீசார் சோதனை செய்தனர். இந்தியா முழுவதும் குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடக்காமல் தடுக்க பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், பஸ் நிலையம், ரயில் நிலையம், வணிக வளாகங்கள் ஆகியவற்றில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி நாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் இருப்பு பாதை போலீசார், ரயில்வே பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் ரயில் நிலைய நடைமேடைகள், பார்சல் அலுவலகம், பயணிகள் தங்கும் அறை, டிக்கெட் கவுன்ட்டர், வாகன நிறுத்தும் இடங்கள் ஆகியவற்றில் ரயில்வே போலீசார் சோதனை நடத்தினர். இதுமட்டுமின்றி பார்சல்கள், சரக்குகள் ஆகியவை பலத்த சோதனைக்கு பின்னரே ரயில் நிலையத்துக்குள் கொண்டு செல்ல அனுமதித்தனர். மேலும் நாகப்பட்டினம் வந்த அனைத்து பயணிகள் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் உள்ள பயணிகளின் உடமைகளை சோதனை செய்தனர். அதேபோல ரயில் நிலையத்திற்கு வந்து செல்லும் பயணிகளின் உடமைகளும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனையிட்ட பிறகே ரயில்களில் கொண்டு எடுத்து செல்ல போலீசார் அனுமதித்தனர்.
The post குடியரசு தினத்தை முன்னிட்டு ரயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை, கண்காணிப்பு appeared first on Dinakaran.