ஈரோடு, ஜன.25: ஈரோட்டில் குடியரசு தின விழாவை முன்னிட்டு மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் போலீசார் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். ஈரோடு ஆணைக்கல்பாளையத்தில் உள்ள மாவட்ட காவல் துறையின் ஆயுதப்படை மைதானத்தில் குடியரசு தின விழா நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இவ்விழா, ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில், எஸ்பி ஜவகர் முன்னிலையில் நடைபெற உள்ளது. இவ்விழாவை முன்னிட்டு, ஈரோடு ஆணைக்கல்பாளையத்தில் உள்ள மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நேற்று காலை போலீசார் அணிவகுப்பு ஒத்திகை நடந்தது. இதில், பேண்டு வாத்தியம் முழங்க போலீசார் ஒத்திகையில் ஈடுபட்டனர்.
மேலும், இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐக்கள் வாள் ஏந்தியபடி கவாத்து பயிற்சி மைதானத்தை சுற்றி வலம் வந்தனர். குடியரசு தினத்தன்று தேசியக்கொடி ஏற்றியபின், கலெக்டர், எஸ்பிக்கு அணிவகுப்பில் மரியாதை செலுத்துவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. தொடர்ந்து, இன்று (25ம் தேதி) காலை, அதே மைதானத்தில் 5 பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலை நிகழ்ச்சி ஒத்திகையில் ஈடுபட உள்ளனர். அதேபோல், இறுதி நாள் போலீசார் அணிவகுப்பு ஒத்திகையும் நடக்கிறது. தொடர்ந்து, நற்சான்றிதழ் பெறும் அரசு அலுவலர்கள் குறித்த பட்டியல் தயார் செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post குடியரசு தின விழாவை முன்னிட்டு ஈரோடு ஆயுதப்படை மைதானத்தில் போலீசார் அணிவகுப்பு ஒத்திகை appeared first on Dinakaran.