ஊட்டி, ஜன.24: குடியரசு தினத்தன்று நடக்கும் அணிவகுப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் என்சிசி மாணவர்கள் ஊட்டியில் ஒத்திகை நிகழ்ச்சி மேற்கொண்டனர். குடியரசு மற்றும் சுதந்திர தினத்தன்று பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, கலை நிகழ்ச்சிகள் ஆகியன நடக்கும். பழங்குடியின மக்களின் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகளும் நடக்கும். முன்னதாக விழாவில், போலீசார் மற்றும் பள்ளி மாணவர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி மேற்கொள்ளப்படுவது வழக்கம்.
இந்த அணி வகுப்பு மரியாதையை கலெக்டர் ஏற்றுக் கொள்வது வழக்கம். நீலகிரி மாவட்டத்தில் நடக்கும் குடியரசு தினத்தன்று என்சிசி மாணவர்கள், என்எஸ்எஸ் மாணவர்கள், செஞ்சுலுவை சங்க மாணவர்கள் பங்கேற்று மிடுக்குடன் நடைபோட்டுச் செல்வார்கள். .இதனை பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் கண்டு ரசித்து செல்வார்கள். இந்நிலையில், வரும் 26ம் தேதி ஞாயிற்று கிழமை ஊட்டியில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் குடியரசு தின விழா நடக்கவுள்ளது.
இதற்காக நாள் தோறும் ஒத்திகை நிகழ்ச்சிகள் அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நடந்து வருகிறது. காலையில் போலீசார் அணி வகுப்பு ஒத்திகை நிகழ்ச்சிகளும், அதனை தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளின் அணி வகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்து வருகிறது.
விழாவிற்கு இன்னும் 2 தினங்களே உள்ள நிலையில், தற்போது மாணவர்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். நேற்றும் ஊட்டியில் உள்ள அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் அணிவகுப்பு பயிற்சியில் என்சிசி மாணவ, மாணவிகள் மற்றும் இதர பிரிவுகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் ஈடுபட்டனர்.
The post குடியரசு தின அணி வகுப்பு ஒத்திகை appeared first on Dinakaran.