குன்னூர்,ஏப்.26: குன்னூர் அருகே குடிநீர் தொட்டி அமைக்கும் பணியில் தனியார் கடை உரிமையாளருக்கும்,பொதுமக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால், பரபரப்பு நிலவியது. நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே மேலூர் ஊராட்சிக்குட்பட்ட தூதூர்மட்டம் மற்றும் கொலக்கொம்பை பகுதியில் மாவட்ட ஊராட்சி சார்பாக பொதுமக்கள் பயன்பெரும் வகையில் ரூ.1.30 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் தொட்டி அமைக்க ஊராட்சி சார்பில் நிதி ஒதுக்கப்பட்டது. மேலும் தூதூர்மட்டம் பேருந்து நிலையம் பகுதியில் ஊராட்சிக்கு சொந்தமான இடத்தில், ஏற்கனவே குடிநீர் குழாய் பொருத்தப்பட்ட பகுதியில் குடிநீர் தொட்டி அமைப்பதற்கு ஊராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.
அதற்கான கட்டுமான பணிகள் நடந்து கொண்டிருந்தபோது,அப்பகுதியில் கடை வைத்திருக்கும் உரிமையாளர் ஒருவர், ‘இங்கு குடிநீர் தொட்டி அமைத்தால், தனது கடை மறைக்கப்படும்’ என கூறி கட்டிடத்தை இடித்ததாக கூறப்படுகிறது.இதைப்பார்த்த அப்பகுதி பொது மக்கள் ஒன்று கூடி கடை உரிமையாளரிடம் வாக்குவாதம் செய்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post குடிநீர் தொட்டி அமைப்பதில் தகராறு appeared first on Dinakaran.