அண்ணாநகர்: சென்னை கோயம்பேட்டில் குடித்துவிட்டு வந்ததை தாய் கண்டித்ததால் கழிவுநீர் தொட்டியில் குதித்து 16 வயது சிறுவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. இதில் 4 மணி நேர போராட்டத்துக்குப் பின் சிறுவனின் சடலம் மீட்கப்பட்டது. சென்னை சின்மயா நகர் மணவாளன் சாலை பகுதியைச் சேர்ந்த தம்பதி மதன்குமார் மற்றும் சிலம்பரசி. இவர்களுக்கு வசந்தகுமார் (16) என்ற மகன் இருந்துள்ளார். 10ம் வகுப்பு முடித்த வசந்தகுமார் வேலக்குச் செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் நண்பர்களுடன் வெளியே சென்ற வசந்தகுமார் இரவில் குடிபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார். இதனை தாய் சிலம்பரசி கண்டித்துள்ளார். இதனால் வசந்தகுமார் மன அழுத்தத்தில் இருந்துள்ளார்.
இதனையடுத்து, நேற்று காலை தனது நண்பரை செல்போனில் தொடர்புகொண்டு பேசிய வசந்தகுமார் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக கூறியுள்ளார். இதற்காக, கோயம்பேடு குலசேகரபுரத்தில் அமைந்துள்ள கழிவுநீர் உந்து நிலையத்தில் உள்ள கிணறு அமைந்துள்ள இடத்துக்கு வசந்தகுமார் சென்றுள்ளார்.
பதறியடித்து அங்கு ஓடிவந்த நண்பர், வசந்தகுமாரை சமாதானம் செய்ய முயன்றுள்ளார். ஆனால் பிடிவாதமாக இருந்த வசந்தகுமார் கழிவுநீர் கிணற்றில் குதித்துவிட்டார். இதுகுறித்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கோயம்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் கோயம்பேடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய பணியார்களுடன் போலீசார் அங்கு வந்தனர். சுமார் 30 அடி உயரம் உள்ள கழிவுநீர் தொட்டிக்குள் கயிறைக் கட்டி, மூச்சுக் கருவி பொருத்தியபடி வசந்தகுமாரை மீட்கும் பணியில் இறங்கினர். சுமார் 4 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு வசந்தகுமாரை சடலமாக மீட்டனர். பின்னர் சடலத்தை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
The post குடித்துவிட்டு வந்ததை தாய் கண்டித்ததால் கழிவுநீர் தொட்டியில் குதித்து 16 வயது சிறுவன் தற்கொலை: 4 மணி நேர போராட்டத்துக்கு பின் சடலம் மீட்பு appeared first on Dinakaran.