அகமதாபாத்: ஐபிஎல் போட்டியில் இன்று அகமதாபாத்தில் நடைபெறும் 51வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைடன்ஸ்-சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. முன்னாள் ஐபிஎல் சாம்பியன்களான இந்த 2 அணிகளும் இதுவரை 6 ஆட்டங்களில் மட்டுமே மோதி இருக்கின்றன. அவற்றில் குஜராத் 4 ஆட்டங்களிலும், ஐதராபாத் ஒரு ஆட்டத்திலும் வென்றுள்ளன. எஞ்சிய ஒரு ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டது. இந்த ஆட்டங்களில் அதிகபட்சமாக குஜராத் 199, ஐதராபாத் 195 ரன்னும் விளாசி இருக்கின்றன. குறைந்தபட்சமாக குஜராத் 162, ஐதராபாத் 154 ரன் விளாசி இருக்கின்றன. இந்த 2 அணிகளும் கடைசியாக களம் கண்ட 3 ஆட்டங்களில் குஜராத் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. ஒரு ஆட்டம் ரத்தானது. சுப்மன் கில் தலைமையிலான குஜராத்தும், பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஐதராபாத்தும் மற்ற அணிகளுடன் கடைசியாக விளையாடிய தலா 5 ஆட்டங்களில் குஜராத் 3-2 என்ற கணக்கிலும், ஐதராபாத் 2-3 என்ற கணக்கிலும் வெற்றி தோல்விகளை சந்தித்துள்ளன.
நடப்புத் தொடரில் இதுவரை 9 ஆட்டங்களில் ஆடியுள்ள குஜராத் 6 ஆட்டங்களில் வெற்றியும், 3 ஆட்டங்களிலும் தோல்வியும் சந்தித்துள்ளது. புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்த குஜராத் அணி, இப்போது மும்பையின் திடீர் எழுச்சிக்கு பிறகு பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. அடுத்தச் சுற்று வாய்ப்பில் நீடித்தாலும் லக்னோ, ராஜஸ்தான் அணியிடம் கிடைத்த படுதோல்விகள் அணியை எச்சரிக்கைப்படுத்தி இருக்கும். அதேபோல் ஐதராபாத் அணி இதுவரை 9 லீக் ஆட்டங்களில் ஆடி 3 வெற்றிகளை மட்டும் வசப்படுத்தி உள்ளது. சில நாட்களுக்கு முன்பு சென்னையை அதன் சொந்த களத்தில் வீழ்த்திய உற்சாகத்துடன் ஐதராபாத் இன்று குஜராத்தை மீண்டும் எதிர் கொள்கிறது. நடப்புத் தொடரில் ஐதராபாத்தில் ஏப்.6ம் தேதி இவ்விரு அணிகளும் மோதிய 19வது லீக் ஆட்டத்தில் குஜராத் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. எனவே, இன்றைய ஆட்டத்தில் வென்று பதிலடி கொடுக்க ஐதராபாத் வேகம் காட்டும் என்பதால் இன்றை ஆட்டம் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
The post குஜராத்துக்கு சன்ரைசர்ஸ் பதிலடி தருமா?; அகமதாபாத்தில் இன்று பலப்பரீட்சை appeared first on Dinakaran.