குஜராத்தில் புதிய மருத்துவமனை திறந்த போலி டாக்டர்கள் - அழைப்பிதழில் மூத்த காவல் அதிகாரிகளின் பெயர்கள்

7 months ago 25

காந்திநகர்,

குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள பண்டசேரா பகுதியில் நேற்று முன்தினம் 'ஜன்சேவா பல்நோக்கு மருத்துவமனை' என்ற பெயரில் புதிய மருத்துவமனை ஒன்று திறக்கப்பட்டது. முன்னதாக திறப்பு விழாவை முன்னிட்டு, அப்பகுதியில் உள்ள மக்களுக்கு அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டிருந்தன. அதில் சூரத் கமிஷனர் உள்பட பல்வேறு மூத்த காவல்துறை அதிகாரிகள் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள உள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் திறப்பு விழாவில் காவல்துறை அதிகாரிகள் யாரும் பங்கேற்கவில்லை. இதற்கிடையில் மருத்துவமனையின் திறப்பு விழா குறித்த தகவல் போலீசாரை எட்டியது. அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருந்த காவல்துறை அதிகாரிகளுக்கு இது குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்பது தெரியவந்தது.

இதையடுத்து களத்தில் இறங்கிய போலீசார், சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரணை நடத்தியபோது, அந்த மருத்துவமனையின் நிறுவனர்களான 5 பேரில், 3 பேர் மீது ஏற்கனவே வழக்குகள் நிலுவையில் இருப்பது கண்டறியப்பட்டது. இதில் 2 பேர் போலி டாக்டர்கள் என்பதையும் போலீசார் கண்டறிந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து மருத்துவமனை வளாகம் மூடப்பட்டது. அதோடு அங்கிருந்த மற்ற டாக்டர்கள் குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். போலி டாக்டர்கள் இணைந்து புதிய மருத்துவமனையை திறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read Entire Article