
அகமதாபாத்:
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் இருப்பதாக உளவுத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அந்த குடியிருப்பில் பயங்கரவாத தடுப்பு படையினர் (ஏ.டி.எஸ்.) மற்றும் வருவாய் புலனாய்வு பிரிவினர் இணைந்து அதிரடி சோதனை நடத்த சென்றனர்.
அங்கு வீடு பூட்டப்பட்டு இருந்தது. விசாரணையில் அந்த வீட்டில் மேக் ஷா என்பவர் வசித்து வருவரும், அவரது தந்தை மகேந்திர ஷா, துபாயில் பங்குச்சந்தை முதலீட்டாளராக இருப்பதும் தெரியவந்தது. மேலும் அவரின் உறவினர் ஒருவர் அதே குடியிருப்பில் 4-வது மாடியில் வசிப்பதும் தெரியவந்தது. அவரிடம் இருந்து வீட்டின் சாவியை பெற்று பயங்கரவாத தடுப்பு படையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது வீட்டின் உள்ளே 87.9 கிலோ தங்க கட்டிகள், 19.6. கிலோ தங்க நகைகள் மற்றும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள 11 உயர் ரக வெளிநாட்டு கடிகாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அங்கு கட்டுக்கட்டாக பணம் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு சிக்கிய பணத்தின் அளவு அதிகமாக இருந்ததால் அதை எண்ணுவதற்காக எந்திரங்கள் கொண்டு வரப்பட்டு பணம் எண்ணப்பட்டது. அதன் மூலம் வீட்டில் இருந்த ரொக்கப் பணம் ரூ.1.37 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்க கட்டிகள், தங்க நகைகள், ரொக்கப்பணம் ஆகியவற்றின் மொத்த மதிப்பு ரூ.100 கோடி இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் மற்றும் பணத்தை பயங்கரவாத தடுப்பு படையினர் வருவாய் புலனாய்வு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவர்கள் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் அனைத்தும் வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அந்த வீட்டில் வசிக்கும் மேக் ஷா, அவரது தந்தை மகேந்திர ஷா ஆகிய இருவருக்குமான நிதி பரிவர்த்தனைகள் போலி நிறுவனங்கள் மூலம் நடத்தப்பட்டு இருக்கலாம் எனவும் போலீசார் கருதுகின்றனர். இந்த சம்பவத்தின் பின்னணியில் சர்வதேச கடத்தல் கும்பலுக்கு தொடர்பு உள்ளதா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்படுகிறது.