வதோதரா: இந்திய விமானப்படையின் பழைய அவ்ரோ-748 விமானங்களுக்கு பதிலாக 56 சி-295 போக்குவரத்து விமானங்களை வாங்க ஸ்பெயினின் ஏர்பஸ் டிஃபன்ஸ் நிறுவனத்துடன் கடந்த 2021ல் இந்தியா ஒப்பந்தம் செய்தது. இதன்படி, ஏர்பஸ் நிறுவனம் அடுத்த 4 ஆண்டுகளில் 16 விமானங்களை ஸ்பெயினில் தயாரித்து வழங்கும். மீதமுள்ள 40 விமானங்கள் இந்தியாவில் டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் (டிஏஎஸ்எல்) நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்டு வழங்கப்படும். இதற்கான டாடா நிறுவனத்தின் விமான உற்பத்தி ஆலை குஜராத் மாநிலம் வதோதராவில் அமைக்கப்பட்டுள்ளது.
இதுவே இந்தியாவில் நிறுவப்படும் முதல் தனியார் போர் விமான உற்பத்தி ஆலை. இந்த ஆலையை பிரதமர் மோடியும், ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செசும் நேற்று கூட்டாக திறந்து வைத்தனர். பின்னர் ஆலையை இரு பிரதமர்களும் சுற்றிப் பார்த்தனர். இந்த ஆலையில் இருந்து, 2026ல் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் விமானம் ஒப்படைக்கப்படும் என டாடா சன்ஸ் தலைவர் என்.சந்திரசேகரன் உறுதி அளித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ‘‘இந்த ஆலை இந்தியா ஸ்பெயின் உறவை வலுப்படுத்துவதோடு, மேக் இன் இந்தியா, உலகத்திற்கான தயாரிப்புகள் திட்டங்களையும் வலுப்படுத்தும். பாதுகாப்பு துறையில் பொதுத்துறை நிறுவனங்களை வலுப்படுத்தியதோடு, தனியார் ஒத்துழைப்பையும் ஊக்கப்படுத்தி உள்ளோம்.
இதனால், கடந்த 10 ஆண்டுகளில், இந்தியாவின் பாதுகாப்பு துறை ஏற்றுமதி 30 மடங்கு அதிகரித்துள்ளது. எனவே, எதிர்காலத்தில் நாம் விமானங்களை ஏற்றுமதி செய்வோம். விமானத்தின் வடிவமைப்பு முதல் உற்பத்தி வரை இந்த தொழிற்சாலையில் நடக்கும். வதோதரா விமான உற்பத்தியின் மையமாக இருக்கும்’’ என்றார். இந்த ஆலை ஸ்பெயினுக்கும் இந்தியாவுக்குமான இருதரப்பு உறவை பிரதிபலிக்கிறது என ஸ்பெயின் பிரதமர் சான்செஸ் கூறினார்.
* இந்தியா மீது உலகம் புதிய நம்பிக்கை
குஜராத்தின் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள லத்தியில் ரூ.4,800 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டப் பணிகளை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், ‘‘இந்தியா தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருவதால் உலக அரங்கில் இந்தியாவின் பெருமை, செல்வாக்கு அதிகரித்து வருகிறது. ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை புதிய நம்பிக்கையுடனும், புதிய பார்வையுடனும் பார்க்கிறது. முழு உலகமும் இந்தியாவின் பேச்சை கேட்கிறது. இந்தியாவில் முதலீடு செய்ய ஒவ்வொரு நாடும் விரும்புகிறது’’ என்றார்.
* இலவச காப்பீடு இன்று தொடக்கம்
ஆயுஷ்மான் பாரத் இலவச மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியோருக்கு இலவச மருத்துவ காப்பீடு வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். மேலும், ரோஸ்கர் மேளா திட்டத்தின் கீழ் 51,000 பேருக்கு நியமன கடிதங்களை வழங்குதல் மற்றும் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
* புரிந்துணர்வு ஒப்பந்தம்
வதோதராவில் பிரதமர் மோடியும், ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செசும் லட்சுமி விலாஸ் அரண்மனையில் நேற்று இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, உள்கட்டமைப்பு, ரயில் போக்குவரத்து, கலாச்சாரம் மற்றும் சுற்றுலா தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. உக்ரைன் போர் விவகாரம் குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்தனர்.
The post குஜராத்தின் வதோதராவில் நாட்டின் முதல் தனியார் விமான உற்பத்தி ஆலை திறப்பு: பிரதமர் மோடி – ஸ்பெயின் பிரதமர் சான்செஸ் பங்கேற்பு appeared first on Dinakaran.