அகமதாபாத்: குஜராத் மாநில கூடுதல் டிஜிபி ராஜ்குமார் பாண்டியன் கண்ணியக்குறைவாகவும், அவமதிக்கும் விதத்தில் நடந்தார் என்றும் அவருக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என சட்ட பேரவை சபாநாயகருக்கு காங்கிரஸ் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி கடிதம் எழுதியுள்ளார். குஜராத் மாநில காங்கிரஸ் செயல்தலைவர் ஜிக்னேஷ் மேவானி எம்எல்ஏ நேற்று கூறுகையில்,‘‘ மாநிலத்தில் உள்ள தலித் மக்களின் பிரச்னைகள் பற்றி விவாதிப்பதற்காக, காங்கிரஸ் கட்சி தலித் பிரிவு தலைவர் ஹிதேந்திர பிதாடியாவுடன் கூடுதல் டிஜிபி(தலித்,பழங்குடியினர் பிரிவு) ராஜ்குமார் பாண்டியனை நேற்றுமுன்தினம் சந்தித்தேன்.
அவரது அலுவலகத்தில் நுழைந்தவுடன் இரண்டு பேரின் செல்போன்களை அலுவலகத்துக்கு வெளியில் வைத்து விட்டு வரும்படி ஐபிஎஸ் அதிகாரி கூறினார். எந்த விதிகளின் அடிப்படையில் இவ்வாறு கூறுகிறீர்கள் என்று கேட்ட போது, கோபமடைந்த பாண்டியன் தன்னுடைய உதவியாளரிடம் சொல்லி இரண்டு பேரின் செல் போன்களை வாங்கி வைக்கும்படி கூறினார்.
எம்பி மற்றும் எம்எல்ஏக்கள் சந்திக்க வரும் போது அவர்களை மரியாதையுடன் அதிகாரிகள் நடத்த வேண்டும் என்ற விதி இருப்பது பற்றி கூறியதும் கூட்டம் முடிந்து விட்டது. நீங்கள் செல்லலாம் என்று கூறினார். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியான என்னை அவமதிக்கும் வகையில் அதிகாரி பாண்டியன் நடந்து கொண்டார். எனவே, அவருக்கு எதிராக சட்ட பேரவையில் உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவரவேண்டும் என சபாநாயகர் சங்கர் சவுத்ரிக்கு கடிதம் எழுதி உள்ளேன்’’ என்றார். மேவானியின் இந்த கோரிக்கை குறித்து சபாநாயகர் அலுவலகம் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
The post குஜராத் கூடுதல் டிஜிபி பாண்டியனுக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம்: சபாநாயகருக்கு காங். எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி கடிதம் appeared first on Dinakaran.