குக்கர் தலைவருக்கு எதிரான வழக்கை சேலத்துக்காரர் வாபஸ் பெற்றதால் புலம்பும் மாஜி அமைச்சர் பற்றி சொல்கிறார் : wiki யானந்தா

1 day ago 2


‘‘ரப்பர் மர டெண்டர் அறிவிப்பு ரத்தான விவகாரத்தில் சமூக வலைதள அவதூறுகளுக்கு எதிராக புகார் போயிருக்காமே தெரியுமா..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘கடைக்கோடி மாவட்டத்தில் ஆன்மிக துறைக்கு சொந்தமாக உள்ள எஸ்டேட்டில் இருக்கும் ரப்பர் மரத்தை வெட்டி பால் எடுக்க டெண்டர் அறிவிப்பு செய்தாங்க.. ஆன்லைன் மூலம் தான் டெண்டர் நடக்கும் என்றும் அறிவிப்பு வெளியாகி இருந்தது. ஆனால் டெண்டர் தேதி வரைக்கும் ஒரே ஒரு நபர்தான் விண்ணப்பம் செய்து இருந்தாராம்.. இதனால விதிமுறைப்படி டெண்டரை கேன்சல் செய்துட்டாங்களாம்.. ஆனால் இதை காரணமாக வச்சு, மாவட்ட ஆன்மிக குழு உறுப்பினர்களை பற்றி சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பி வருகிறார்களாம்.. குறிப்பாக ஜோதிமயமான உறுப்பினர் ஒருவரை பற்றி, அவதூறு கருத்துகள் பரப்பப்பட, கொதிப்படைந்த உறுப்பினர்கள் மாவட்டத்துக்கே உயர் அதிகாரியான அம்மணியை சந்திச்சு பேசி, இதற்கு நடவடிக்கை எடுக்கணும் என்று கோரிக்கை வைச்சாங்களாம்..

அவுங்களும், காக்கி உயர் அதிகாரியை போய் பாருங்கள். நான் சொல்றேன். இதை பெரிசு பண்ணாதீங்க என கூறி அனுப்பி வைச்சு இருக்காங்க.. இதனால காக்கி உயர் அதிகாரி அலுவலகத்துல தற்போது ஆன்மிக குழுவுல உள்ள 3 உறுப்பினர்கள் சேர்ந்து புகார் கொடுத்து இருக்காங்க.. இந்த புகாரை சைபர் க்ரைம் போலீஸ் விசாரிக்கிறதாம்.. எந்த செல்போன் எண்ணில் இருந்து பரவ விட்டாங்க என விசாரணை நடந்து வருகிறதா பேசிக்கிறாங்க.. வாட்ஸ் அப் குழுக்கள் வச்சுட்டு சிலர் செய்யக்கூடிய அட்டூழியங்கள் எல்லை கடந்து போகுது.. அந்த ஆண்டவன் தான் அவங்களை கவனிக்கணும்னு குழு உறுப்பினர்கள் வேதனையுடன் கூறி வர்றாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘மலராத கட்சி தலைமையும் தங்களை கைவிட்டு விடுமோ என்ற கவலை பலாப்பழக்காரர் தரப்பை வாட்டி வதைக்கிறதாமே..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘ஹனிபீ மாவட்டத்தில் பிக்பாண்ட் நகரில் சமீபத்தில் நடந்த சட்ட மாமேதையின் பிறந்தநாள் விழாவை பலதரப்பினரும் கொண்டாடினர். ஆனால், பலாப்பழக்காரர் தரப்பில் மட்டும் சைலண்ட் மோட் ஆக இருந்ததாம்.. விசாரித்தால், கட்சி இணைப்பு விவகாரத்தில் மலராத கட்சியின் டெல்லி தலைமை உதவியுடன் எப்படியும் இலைக்கட்சியில் மீண்டும் ஐக்கியமாகி விடலாம் என பலாப்பழக்காரரும், அவரது ஆதரவாளர்களும் முழுமையாக நம்பி இருந்தாங்களாம்.. ஆனால், அவர்களது ஆசை நிறைவேறாமல் போனதில் கடும் வருத்தமாம்.. மேலும், இலைக்கட்சியின் உள்கட்சி விவகாரத்தில் தலையிட மாட்டோம் என உள்துறை அமைச்சரே கூறியதைக் கேட்டு நிலைகுலைந்து போன பலாப்பழக்காரர் தரப்பு, அந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லையாம்.. மலராத கட்சி தலைமையும் தங்களை கைவிட்டு விடுமோ என்ற கவலை பலாப்பழக்காரர் தரப்பிற்கு வந்து வாட்டி வதைக்கிறதாம்..

இதனால் எந்த நிகழ்விலும் கலந்துகொள்ளாமல் அமைதி காக்கின்றனராம்.. கஷ்டப்பட்டு இலையில் போய் இணைவதற்கு பதிலாக, ஏன் பேசாமல் டைரக்டா மலரில் போய் இணையக்கூடாது என யோசிக்கின்றனராம்.. இவர்களின் பல்ஸ் அறிந்து இழுக்கும் வேலையும் நடக்காம்.. ஆனால், முக்கிய பதவி வேண்டுமென்ற டிமாண்ட் காரணமாக இணைப்பு தள்ளிப்போவதாகவும் தகவல்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘குக்கர் கட்சி தலைவருக்கு எதிரான வழக்கை சேலத்துக்காரர் திடீரென வாபஸ் பெற்றதால் தன்னுடைய அரசியல் வாழ்க்கை என்னவாகுமோ என மாஜி அமைச்சர் புலம்புகிறாராமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘குக்கர் கட்சி தலைவருக்கு எதிரான வழக்கை சேலத்துக்காரர் திடீரென வாபஸ் பெற்று இருக்காரு.. இது இலை கட்சியில் பேசும் பொருளாக மாறி இருக்கிறதாம்.. வழக்கின் வாபஸ் பின்னணி குறித்து டெல்டா மாவட்டம் முழுவதும் இலை கட்சி நிர்வாகிகளுக்குள் அரசல் புரசலாக பேசிக்குறாங்க.. வருங்காலங்களில் இலை கட்சியில் அடுத்தடுத்து என்ன நடக்க போகிறதோ என தொண்டர்கள் மத்தியில் பரவலாக பேச்சு ஓடுகிறதாம்..

டெல்டாவில் மனுநீதி சோழன் மாவட்டத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகியான மாஜி அமைச்சர் கூட இந்த தகவலை கேட்டு அதிர்ச்சியில் இருக்காராம்.. இலை கட்சியில் டெல்டா மாவட்டத்தில் அசைக்க முடியாத இடத்தில் இருந்து வருகிறேன். ஒருவேளை எதிர்பாக்காதது நடந்து விட்டால், தன்னுடைய அரசியல் வாழ்க்கை என்னவாகும் என அந்த மாஜி அமைச்சர் தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லி புலம்பி வருகிறாராம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘மண்டல உயர் அதிகாரியை மீறி பல பெண் ஊழியர்களை பணியிட மாற்றம் செய்வதில் அக்கறை காட்டுகிறாராமே ஒரு கண்காணிப்பாளர்..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘மான்செஸ்டர் மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் பணிபுரியும் ஒன்பது எழுத்து பெயர் கொண்ட கண்காணிப்பாளர் ஒருவர், பெண் ஊழியர்களை அவருக்கு ஏற்ப வளைத்து போடுவதில் படு கில்லாடியாக இருக்கிறாராம்..

இவர், சுற்றிலும் பெண் ஊழியர்களை கைக்குள் வைத்துக்கொண்டு தன்னிச்சையாக தர்பார் காட்டி வருகிறாராம்.. இந்த மண்டல அலுவலக உயர் அதிகாரி, ஒரு சில பிரிவுகளில் பிரச்னைக்குரிய பெண் ஊழியர்களை இடமாற்றம் செய்தாராம்.. ஆனாலும் அவர்களை பணி செய்ய விடாமல் தடுத்து, தனது பக்கம் இழுத்துக்கொண்டு வந்துவிட்டாராம்.. இந்த மண்டல உயரதிகாரிக்கு தெரியாமலேயே இவர் பல தில்லாலங்கடி வேலை செய்து வருகிறாராம்.. மண்டல உயரதிகாரியை மீறி, இவர் பல பெண் ஊழியர்களை பணியிட மாற்றம் செய்வதில் அக்கறை காட்டுவது ஏன் என்ற கேள்வி பலரையும் புருவம் உயர்த்த செய்துள்ளதாம்.. ஏற்கனவே, இம்மண்டலத்தில் சில பில் கலெக்டர்கள் வசூல் குவிப்பதில் உச்சம் தொடும் நிலையில், இவரும் அதை நோக்கிய பயணத்தில் வேகம் செலுத்தி வருகிறாராம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.

The post குக்கர் தலைவருக்கு எதிரான வழக்கை சேலத்துக்காரர் வாபஸ் பெற்றதால் புலம்பும் மாஜி அமைச்சர் பற்றி சொல்கிறார் : wiki யானந்தா appeared first on Dinakaran.

Read Entire Article