தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தின் கீழையூர் புறநகர்ப் பகுதியில் ஒரே இடத்தில் அமைந்துள்ள இரு சிவன் கோயில்கள்தான் கீழையூர் இரட்டைக் கோயில்கள் (Twin Temples, Keezhaiyur) என்று சொல்லப்படுகிறது. சோழமன்னர்களின் சிற்றரசர்களாகிய பழுவேட்டரையர்களின் தலைநகரான பழுவூரின் ஒரு பகுதியாக கீழையூர் இருந்துள்ளது.
திருச்சியிலிருந்து அரியலூர் அல்லது ஜெயங்கொண்டம் செல்லும் சாலையில், அரியலூர் மாவட்டத்தில் அரியலூர் வட்டத்தில் தஞ்சாவூரிலிருந்து 35 கிமீ வடக்கிலும், அரியலூரிலிருந்து 15 கிமீ தொலைவிலும் உள்ள கீழையூர் மேலப்பழுவூருக்குச் சற்று முன்பாக அமைந்துள்ளது.
இருகோயில்கள் அடுத்தடுத்து ஒற்றை மதிலை அரணாகக்கொண்டு உள்ளன. மேற்கு நோக்கிய நிலையில் இக்கோயில்களின் முதன்மை நுழைவாயில் உள்ளது. தென்மேற்குத் திசையையொட்டி ராஜகோபுரம் உள்ளது. ராஜகோபுரத்தின் வெளிப்புறம் இரு புறத்திலும் துவாரபாலகர்கள் உள்ளனர். அவனி கந்தர்வ ஈசுவர கிருகம் என்றழைக்கப்படுகின்ற இக்கோயில்களின் வட புறத்தில் உள்ள கோயில் வடவாயில் கோயில் (சோழிச்சரம்) என்று அழைக்கப்படுகிறது. தென்புறத்தில் உள்ள கோயில் தென்வாயில் ஸ்ரீகோயில் (அகத்தீசுவரம்) என்று அழைக்கப்படுகிறது.
இப்பெயர்கள் அங்குள்ள கல்வெட்டு வாயிலாக அறியப்படுகின்றன. பழுவேட்டரையர்கள் சிற்றரசர்களில் குமரன்கண்டன் மற்றும் குமரன் மறவன் காலத்தில் இக்கோயில்கள் கட்டப்பட்டன. இதன் காலம் கி.பி. 9ஆம் நூற்றாண்டு. இக்கோயில் வளாகத்தில் இரண்டு சிவன் கோயில்களுடன் சில பரிவாரக் கோயில்களும் காணப்படுகின்றன. ஒரு கோயிலுக்கு மூலவரான இறைவன் அகஸ்தீஸ்வரர் இறைவி அபிதகுஜாம்பிகை தனித்தனிச் சன்னதிகளில் உள்ளனர். மற்றொரு கோயிலுக்கு மூலவரான சோழீஸ்வரர் சன்னதியில் இறைவி மனோன்மணி உள்ளார்.
சிற்பக்கலையின் எடுத்துக்காட்டாக இரட்டைக் கோயில்களைக் கூறலாம். தாராசுரம் ஐராவதீசுவரர் கோயில், புள்ளமங்கை ஆலந்துறைநாதர் கோயில், கொடும்பாளூர் மூவர் கோயில் உள்ளிட்ட பல கோயில்களை இக்கோயில்கள் நினைவுபடுத்துகின்றன. நுட்பமான சிற்பங்கள், அழகான நந்திகள், நேர்த்தியான கருவறைகள், அழகான மண்டபங்கள், இக்கோயிலில் மேற்கு நோக்கிய நுழைவு வாயிலில் அமைந்துள்ள இரு துவாரபாலகர் சிலைகள் கி.பி 9 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவையாகும்.
மேலும், சூரியன், கணபதி, சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய சிலைகள் தேவகோட்டங்களை அழகுசெய்கின்றன. இக்கோயில் வடக்குப்பக்கத்தில் அருணாச்சலேஸ்வரக் கோயில் அமைந்துள்ளது. அதே காலகட்டத்தில் நிறுவப்பட்டுள்ள இக்கோயிலின் அர்த்தமண்டபத்திற்கு முன் இரு துவாரபாலகர் சிலைகள் உள்ளன. கருவறையைச் சுற்றியுள்ள தேவகோட்டத்தில் பிரம்மா, தட்சிணாமூர்த்தி, சுப்பிரமணியர் கற்சிற்பங்கள் சோழர்காலச் சிற்பத்திறனை உணர்த்துகின்றன.
The post கீழையூர் இரட்டைக் கோயில்கள் appeared first on Dinakaran.