பள்ளிபாளையம்: வெப்படை அருகே ஆள் இல்லாத நிலையில் பைக் தனியாக 100 மீட்டர் ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல் மாவட்டம் வெப்படை அடுத்துள்ள பாதரை கிராமத்தை சேர்ந்தவர் விசைத்தறி தொழிலாளி சௌந்தர்ராஜன்(30). இவர் நேற்று மதியம் தனது பைக்கில் மனைவி நந்தினி(26) மற்றும் குழந்தையுடன் சென்றுள்ளார். மக்கிரிபாளையம் பிரிவு அருகே சென்றபோது சாலையில் நடுவில் இருந்த பள்ளத்தில் பைக் இறங்கியதால் தடுமாறிய சௌந்தர்ராஜன் உள்ளிட்ட மூவரும் நடுரோட்டில் கீழே விழுந்தனர். அப்போது பின்னால் வந்துகொண்டிருந்த கார், அவர்கள் மீது மோதியது. இதில் இருவரும் காயமடைந்தனர்.
அக்கம்பக்தக்தினர் அவர்களை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துமனையில் சேர்த்தனர். பைக்கில் சென்ற மூவரும் கீழே விழுந்த போதிலும், தட்டுத்தடுமாறிய பைக் மீண்டும் தன்னை நிலைநிறுத்திக்கொண்டு ஆள் இல்லாமல் பயணத்தை தொடர்ந்தது. சுமார் 100 மீட்டர் தூரம் வரையிலும் எந்த விதமான உதறலும் இல்லாமல் சென்ற பைக், சாலையின் நடுவே இருந்த காங்கிரீட் தடுப்பில் மோதி கீழே விழுந்தது. பைக் சென்ற காட்சிகள் அப்பகுதியில் பாதுகாப்பிற்காக பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகி இருந்தது. இந்த வீடியோ சமூக வளைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
The post கீழே விழுந்ததில் குழந்தை உள்பட தம்பதி காயம்; விபத்தில் சிக்கிய ‘பைக்’ ஆள் இல்லாமல் 100 மீட்டர் ஓடியது: சிசிடிவி காட்சி வைரல் appeared first on Dinakaran.