கீழடி அருங்காட்சியகத்துக்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

3 hours ago 1

சென்னை,

கீழடி மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகங்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டுகிறார். சென்னையில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டுகிறார். இதன்படி கீழடி அகழாய்வுத் தளத்தில் ரூ.17 கோடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது. கங்கைகொண்ட சோழபுரத்தில் ரூ.22 கோடியில் புதிய அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது. கீழடி இணையதளத்தை தொடங்கி வைத்து 'இரும்பின் தொன்மை' என்ற நூலையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில் நடத்தப்படும் "இரும்பின் தொன்மை நூல் வெளியிடுதல், கீழடி திறந்த வெளி அருங்காட்சியகம் & கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டுதல், கீழடி இணையதளத்தினைத் தொடங்கி வைத்தல்" போன்ற பல்வேறு சிறப்பு நிகழ்வுகள் 23.01.2025 அன்று காலை 10.30 மணியளவில் சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலகக் கலையரங்கத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது.

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையானது, தமிழ்நாட்டில் தொல்லியல் மற்றும் வரலாற்று முக்கியத்துவமிக்க இடங்களில் அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. பல்வேறு அகழாய்வுகளின் வாயிலாக கிடைக்கப்பெற்ற தொல்பொருட்கள் இவ்விழாவில் காட்சிப்படுத்தப்பட உள்ளன.

சிவகங்கை மாவட்டம், கீழடி அகழாய்வுகளில் வெளிப்படுத்தப்பட்ட சங்ககால செங்கல் கட்டுமானங்கள், உறைகிணறுகள், தொழிற்கூடப் பகுதிகள் ஆகியவற்றை பொதுமக்களும் எதிர்காலத் தலைமுறையினரும் நேரடியாகக் கண்டு உணரும் வகையில் கீழடி அகழாய்வுத் தளத்தில் திறந்தவெளி தொல்லியல் அருங்காட்சியகம் (Open Air Museum) 4.48 ஏக்கர் பரப்பளவில் ரூ.17.10 கோடி மதிப்பீட்டில் வடிவமைக்கப்பட உள்ளது. இக்கட்டுமானப் பணிகளை விரைவில் தொடங்கும் வகையில், தமிழ்நாடு முதல்-அமைச்சர் இவ்விழாவில் கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.

தமிழர்களின் பண்பாடு மற்றும் வாழ்க்கை முறையைப் பிரதிபலிக்கும் வகையில் உள்ளூர் கட்டடக் கலைப் பாணியைப் பின்பற்றி வடிவமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகமானது, 1) வைகை மற்றும் கீழடி 2) வேளாண்மை மற்றும் நீர் மேலாண்மை 3) கலம் செய் கோ 4) ஆடையும் அணிகலனும் 5) கடல்வழி வணிகம் 6) வாழ்வும் வளமும் ஆகிய ஆறு கருப்பொருட்களின் அடிப்படையில் தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

கீழடியின் தொன்மைச் சிறப்பையும் வரலாற்றுப் பெருமையையும் அறிந்து கொள்ளவும் பல்துறை அணுகுமுறையோடு அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை நேரடியாக வந்து காண இயலாதவர்கள் தாங்கள் இருக்கும் இடத்திலிருந்தே கண்டுகளிப்பதற்காக மெய்நிகர் சுற்றுலா உருவாக்கப்பட்டு கீழடி இணையதளத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

கீழடி அருங்காட்சியகத் திரையரங்கில் திரையிடப்படும் ஆவணப்படம் மற்றும் காட்சிக் கூடங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அனைத்து வகையான தரவுகள் எனக் கீழடி அருங்காட்சியகம் குறித்தான அனைத்து விவரங்களையும் இந்த மெய்நிகர் சுற்றுலாவில் கண்டு மகிழலாம். இந்த இணையதளம் தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட உள்ளது.

தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்கள் 28.11.2022 அன்று அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் "மாமன்னர் இராஜேந்திர சோழனுக்குச் சிறப்பு சேர்க்கக்கூடிய வகையில் கடற்பயணம், கடல் வாணிகம் மற்றும் கப்பல் கட்டும் தொழில்நுட்பத்தில் தமிழர்கள் சிறந்து விளங்கியதையும், மேலைநாடுகளுடனும், கீழைநாடுகளுடனும் வணிகத் தொடர்பு கொண்டிருந்ததையும் உலகிற்குப் பறைசாற்றும் வகையில் கங்கைகொண்ட சோழபுரத்தில் ஓர் அருங்காட்சியகம் உருவாக்கப்படும்" என அறிவித்தார்.

அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கங்கைகொண்ட சோழபுரம் முதலாம் இராஜேந்திர சோழனால் (கி.பி.1012-1044) சோழர்களின் தலைநகரமாக நிறுவப்பட்டது. இவ்வூரில் அரண்மனை அமைந்திருந்ததாகக் கூறப்படும் மாளிகைமேடு அகழாய்வுத் தளத்தில் செங்கல் கட்டுமானங்கள், கூரை ஓடுகள், இரும்புப் பொருட்கள், செம்புப் பொருட்கள், செப்புக் காசுகள், செலடன் மற்றும் போர்சலைன் வகை சீனப்பானை ஓடுகள் போன்ற பல்வேறு தொல்பொருட்கள் தொடர் அகழாய்வுகளின் வாயிலாக வெளிக்கொணரப்பட்டுள்ளன.

இங்குள்ள கட்டுமான எச்சங்களும், கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகளும் சோழர்களின் தலைநகரான கங்கைகொண்ட சோழபுரத்தின் அரண்மனையின் அடித்தளத்தை உறுதிப்படுத்துகின்றன. சீனப்பானை ஓடுகள் கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் தமிழ்நாடு சீன நாட்டுடன் கொண்டிருந்த வணிகத் தொடர்பினை நிலைநிறுத்துகிறது.

தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி, தொடர் அகழாய்வுகளின் மூலம் பெறப்பட்ட தொல்பொருட்கள் மற்றும் மன்னர் இராஜேந்திர சோழன் அண்டை நாடுகளுடன் கொண்டிருந்த வணிகத்தொடர்பு ஆகியவற்றை பொதுமக்களும் எதிர்காலத் தலைமுறையினரும் அறிந்து கொள்ளும் வகையில் கங்கை கொண்ட சோழபுரம் அருங்காட்சியகம் 2325 சதுர மீட்டர் பரப்பளவில் ரூ.22.10 கோடி மதிப்பீட்டில் அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் அமைக்கப்பட உள்ளது.

இக்கட்டுமானப் பணிகளை விரைவில் தொடங்கும் வகையில், தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட உள்ளது. மேலும், இவ்விழாவில் முதல்-அமைச்சர் அவர்கள் 'இரும்பின் தொன்மை' என்ற நூலினை வெளியிட்டு விழாப் பேருரையாற்ற உள்ளார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Read Entire Article