சென்னை,
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்பேரில், 3 பெண் அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவினர், தற்போது இந்த வழக்கை விசாரணை செய்து வருகிறார்கள். ஞானசேகரனை 7 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க, சைதாப்பேட்டை கோர்ட்டு அனுமதி வழங்கி உள்ளது.
அதன் அடிப்படையில், தற்போது ஞானசேகரன் சிறப்பு புலனாய்வு குழுவினரின் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவரிடம் நூற்றுக்கணக்கான கேள்விகளை கேட்டு சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரித்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு ஞானசேகரனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. அவரை, உடனடியாக சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள், கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் ஞானசேகரன் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தலையில் ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது. இதர சிகிச்சைகளும் அவருக்கு வழங்கப்பட்டன. தற்போது, அவரின் உடல் நிலை சீராக இருப்பதாகவும், போலீஸ் காவலில் அவர் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளார் என்றும் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், வலிப்பு வந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஞானசேகரனின் உடல்நிலை சீரானதை தொடர்ந்து அவரிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் மீண்டும் விசாரணையை தொடங்கியுள்ளனர். ஞானசேகரனின் செல்போன் மற்றும் லேப்டாப் உள்ளிட்ட ஆவணங்களை ஆய்வு செய்த நிலையில் அதில் கிடைத்த ஆதாரங்களை அடிப்படையாக வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் ஞானசேகரனால் வேறு ஏதேனும் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனரா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.