
டப்ளின்,
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் முதல் ஒருநாள் போட்டியில் அயர்லாந்து வெற்றி பெற்ற நிலையில் 2-வது போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. பிரண்டன் கிங் ஒரு ரன்னிலும், எவின் லூயிஸ் 14 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றினர். இந்த இக்கட்டான சூழலில் கை கோர்த்த கீசி கார்டி - ஷாய் ஹோப் அணியை சரிவிலிருந்து மீட்டது. இதில் ஷாய் ஹோப் 75 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அமிர் ஜாங்கோ 22 ரன்களில் அவுட்டானார்.
இருப்பினும் கீசி கார்டி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதமடித்து அசத்தினார். சதத்திற்கு பின்பும் சிறப்பாக விளையாடி வெஸ்ட் இண்டீஸ் 300 ரன்களை எட்ட உதவினார். இறுதி கட்டத்தில் ஜஸ்டின் கிரீவ்ஸ் அதிரடியாக விளையாட (23 பந்துகளில் 50 ரன்கள்) வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 385 ரன்கள் குவித்தது. கீசி கார்டி 170 ரன்களில் ஆட்டமிழந்தார். அயர்லாந்து தரப்பில் பாரி மெக்கார்த்தி 3 விக்கெட்டுகளும், லியாம் மெக்கார்த்தி 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதனையடுத்து அயர்லாந்து பேட்டிங் செய்ய தயாரானபோது மழை பெய்தது. இதனால் ஆட்டத்தை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. மழை நிற்க தாமதம் ஆனதால் அயர்லாந்துக்கு 46 ஓவர்களில் 363 ரன்கள் அடிக்க வேண்டும் என்று இலக்கு மாற்றியமைக்கப்பட்டது.
பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய அயர்லாந்து அணி வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 29.5 ஓவர்களில் 156 ரன்கள் மட்டுமே அடித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அயர்லாந்து அணியின் கடைசி 2 பேட்ஸ்மேன்கள் காயம் காரணமாக பேட்டிங் செய்ய வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் 197 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அத்துடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1-1 என்ற கணக்கில் சமனில் முடித்தது. அயர்லாந்து தரப்பில் அதிகபட்சமாக கேட் கார்மைக்கேல் 48 ரன்கள் அடித்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜெய்டன் சீயல்ஸ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை கீசி கார்டி கைப்பற்றினார்.