கிழக்கு லடாக்கில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இந்திய -சீன வீரர்கள் வெளியேற்றம் முடிந்தது: சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல்

2 weeks ago 3

பெய்ஜிங்: இந்திய-சீன எல்லையில் கல்வான் பகுதியில் கடந்த 2020ம் ஆண்டு இருநாட்டு வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனால், 4 ஆண்டுகளாக பதற்றம் நீடித்து வந்தது. இந்த விவகாரம் தொடர்பாக இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் இடையிலான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்ட நிலையில், கடந்த 2ம் தேதி முதல் இரு நாட்டு வீரர்களும் வெளியேறத்தொடங்கினார்கள். மேலும் கடந்த 23ம் தேதி ரஷ்யாவில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டுக்கு இடையே பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜீ ஜின்பிங் ஆகியோரும் எல்லை தொடர்பாக ஆலோசித்தனர்.

இந்நிலையில் சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் லின் ஜியான் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: சீனா-இந்தியா எல்லை தொடர்பான பிரச்னையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. சீனா மற்றும் இந்திய எல்லை படைகள் இது தொடர்பான தீர்மானங்களை ஒழுங்கான முறையில் செயல்படுத்தி வருகின்றன.

இரு நாட்டுக்கும் இடையே உறுதியான முக்கியமான ஒப்பந்தத்தை தொடர்ந்து, இரு நாடுகளும் கடந்த 2ம் தேதி முதல் கிழக்கு லடாக்கில் உள்ள டெம்சோக் மற்றும் டெப்சாங்கில் இருந்து வீரர்களை வெளியேற்றத்தொடங்கியுள்ளது. இருநாட்டு வீரர்கள் வெளியேற்றம் நிறைவடைந்துள்ளது\” என்றார். மேலும் அங்கு அமைக்கப்பட்ட ராணுவ கூடாரங்கள், உள்கட்டமைப்புக்கள் அகற்றப்பட்டுள்ளன. விரைவில் ஒருங்கிணைந்த ரோந்து பணி தொடங்க உள்ளது.

* சீன ராணுவத்துக்கு இன்று தீபாவளி இனிப்பு
கிழக்கு லடாக்கில் இருநாட்டு வீரர்கள் முழுவதுமாக வெளியேறியுள்ள நிலையில் தீபாவளியை கொண்டாடும் வகையில் சீன வீரர்களுடன் இன்று இந்திய வீரர்கள் இனிப்புக்கள் பரிமாறிக்கொள்வார்கள் என்று இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

The post கிழக்கு லடாக்கில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இந்திய -சீன வீரர்கள் வெளியேற்றம் முடிந்தது: சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article