![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/08/38309349-glenn.webp)
லாகூர்,
பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய 3 நாடுகள் கலந்து கொள்ளும் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த போட்டி இன்று தொடங்கி 14-ந் தேதி வரை நடைபெறுகிறது.
இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். முத்தரப்பு ஒருநாள் தொடரில், லாகூரில் உள்ள கடாபி ஸ்டேடியத்தில் இன்று நடக்கும் முதலாவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன வில் யங் 4 ரன்களிலும், ரச்சின் ரவீந்திரா 25 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து அணியை வில்லியம்சன் - டேரில் மிட்செல் மீட்டெடுத்தனர். இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்தனர். அத்துடன் அணியையும் ஒரளவு சரிவிலிருந்து மீட்டனர். அணியின் எண்ணிக்கை 134 ரன்களாக உயர்ந்தபோது இந்த ஜோடி பிரிந்தது. வில்லியம்சன் 58 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த டால் லதாம் டக் அவுட் ஆகி ஏமாற்றினார்.
பின்னர் களமிறங்கிய கிளென் பிலிப்ஸ் பாகிஸ்தான் பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். சிக்சரும் பவுண்டரியுமாக அடித்து அணியின் ரன் வேகத்தை வெகுவாக உயர்த்தினார். மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த டேரில் மிட்செல் 81 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதி கட்டத்தில் பிரேஸ்வெலின் ஒத்துழைப்புடன் சதம் அடித்து அசத்திய கிளென் பிலிப்ஸ் அணியை 300 ரன்களை கடக்க உதவினார்.
நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 330 ரன்கள் குவித்துள்ளது. கிளென் பிலிப்ஸ் 106 ரன்களுடன் (74 பந்துகள்) களத்தில் இருந்தார். பாகிஸ்தான் தரப்பில் ஷாகீன் அப்ரிடி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 331 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி பாகிஸ்தான் களமிறங்க உள்ளது.