கூடுவாஞ்சேரி: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து திறந்து விடப்படும் கழிவுநீரால், பெரிய ஏரியில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதக்கின்றன. இதனால், ஊரப்பாக்கம் ஊராட்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஊரப்பாக்கம் ஊராட்சியில், ஊரப்பாக்கம், கிளாம்பாக்கம், ஐயஞ்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இதில், ஊராட்சிக்குட்பட்ட கிளாம்பாக்கம் பெரிய ஏரி 282 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இவை பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்நிலையில், வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கம் ஜிஎஸ்டி சாலை ஓரத்தில் உள்ள பேருந்து நிலையம் திறக்கப்பட்டு ஒரு ஆண்டு ஆன நிலையில், தற்போது பேருந்து நிலையத்திலிருந்து வெளியேறும் கழிவுநீர் ஜிஎஸ்டி சாலை மற்றும் ரயில்வே தண்டவாளம் குறுக்கே செல்லும் கால்வாய் வழியாக சென்று கிளாம்பாக்கம் பெரிய ஏரியில் கலக்கிறது. அதுமட்டுமல்லாமல் அருகில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்புகள், ஊரப்பாக்கம் ரயில் நிலையம் அருகில் உள்ள வண்டலூர் பார்க், தனியார் ஓட்டல்கள் மற்றும் தனியார் கம்பெனிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் விஷ வாயு கலந்த கெமிக்கல் தண்ணீர் ஏரியில் சென்று கலக்கிறது.
இதில், கழிவுநீர் ஊர்திகளில் கழிவுநீரை ஏற்றி செல்லாமல் இரவு நேரங்களில் பம்பிங் செய்யப்பட்டு திறந்து விடுவதால் கழிவு நீரானது ஏரியில் சென்று கலக்கிறது. இதனால், அப்பகுதியில் குடிநீர் ஆதாரம் அடியோடு கெட்டு போய்விட்டதாக கூறப்படுகிறது. மேலும், கருப்பு நிறத்தில் தண்ணீர் நிறம் மாறி உள்ளதால் ஏரியில் உள்ள மீன்கள் மற்றும் கிராம இளைஞர்களால் வளர்க்கப்படும் மீன்கள் அனைத்தும் செத்து மிதக்கிறது. இதனால், அப்பகுதியில் விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர்.
இந்நிலையில், ஏரியில் இறங்கி துணி துவைப்பவர்கள், குளிப்பவர்கள் மற்றும் ஆடு, மாடுகளை குளிப்பாட்டுபவர்களுக்கு உடலில் அரிப்பு ஏற்படுவது மட்டுமல்லாமல் கொப்பளமும் உண்டாகி வருகிறது. மேலும், ஏரி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. கொசு உற்பத்தியும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பச்சிளம் குழந்தைகள் முதல் கர்ப்பிணி பெண்கள், நோய்வாய்ப்பட்டோர் என அனைத்து தரப்பினரையும் வாட்டி வதைக்கிறது.
ஏற்கனவே டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்ட இப்பகுதியில் ஏராளமானோர் சளி, இருமல், தலைவலி, காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு ஆளாகி மருத்துவமனைகளுக்கு படையெடுத்து வருகின்றனர். மேலும், ஏரியில் செத்து மிதக்கும் ஆயிரக்கணக்கான மீன்களால் அப்பகுதியில் தொற்றுநோய் பரவும் பேராபத்தும் ஏற்பட்டுள்ளது. எனவே, இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் நேரில் வந்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
The post கிளாம்பாக்கத்தில் பெரிய ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்: நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.