செங்கல்பட்டு: கிளாம்பாக்கத்தில் பேருந்திற்காக நின்று கொண்டிருந்த ஒடிசா மாநில சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததன் எதிரொலியாக, செங்கல்பட்டு பகுதியில் விடிய விடிய போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கடந்த 3ம் தேதியன்று நள்ளிரவு நேரத்தில் சேலத்தில் இருந்து ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வந்தார். அங்கிருந்து கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு செல்வதற்காக காத்திருந்தர்.
அப்போது, அங்கு ஆட்டோ டிரைவர் முத்தமிழ்ச்செல்வன் இந்த நேரத்தில் பேருந்து கிடைக்காது என கூறி தான் அழைத்து செல்வதாக கூறினார். இதற்கு மறுப்பு தெரிவித்து அங்கு அந்த சிறுமி நின்று கொண்டிருந்தபோது, ஆட்டோ டிரைவர் முத்தமிழ்ச்செல்வன் தன்னுடைய நண்பர் தயாளன் ஆகிய இருவரை அந்த பேருந்து நிலையத்திற்கு வர வழைத்தார். பின்னர், சிறுமியை ஆட்டோவில் ஏற்றி அந்த இரவு நேரத்தில் பாலியல் தொந்தரவு கொடுத்ததுடன்.
போலீசார் தங்களை பிடிக்க நெருங்குவதை அறிந்ததும் நெற்குன்றம் பகுதியில் இறக்கி விட்டு சென்றுவிட்டனர். இந்த வழக்கில் தேடப்பட்ட தயாளன் மற்றும் முத்தமிழ்ச்செல்வன் ஆகிய இருவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்கும் வகையில் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்பிரனித் உத்தரவின்பேரில் செங்கல்பட்டு மாவட்ட காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் விடிய விடிய இரவு முழுவதும் கூடுதல் போலீசார் ரோந்து பணி மற்றும் வாகன தணிக்கையிலும் ஈடுபட்டனர்.
இந்நிலையில் செங்கல்பட்டு நகர் பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது ஒரே ஆட்டோவில் 11 பேர் பயணித்து சென்றவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர், உரிய ஆவணங்கள் உள்ளதா என சோதனைக்கு பிறகு விசாரணை நடத்தினர். மேலும், அந்த 11 பேரையும் தனித்தனி ஆட்டோவில் அனுப்பி வைத்தனர்.
அதேப்போல், இரு சக்கர வாகனங்களையும் சோதனைக்கு பின் செல்ல அனுமதித்தனர். கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்துவது இரவு நேரத்தில் மதுபோதையில் தேவையில்லாமல் சுற்றித்திரிவது போன்ற குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையில் இரவுநேர ரோந்துபணி மற்றும் வாகன தணிக்கை பணிகள் நடைபெறுவதாக போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
The post கிளாம்பாக்கத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை எதிரொலி செங்கல்பட்டில் விடிய விடிய போலீசார் வாகன சோதனை appeared first on Dinakaran.