
மும்பை,
இந்திய ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான அணியின் கேப்டனாக ரோகித் சர்மா உள்ளார். தற்போது 37 வயதை எட்டியுள்ள அவர் தனது கெரியரின் கடைசி கட்டத்தில் உள்ளார். எனவே அவருக்கு மாற்று கேப்டனை தேட வேண்டிய நிலை பி.சி.சி.ஐ.-க்கு ஏற்பட்டுள்ளது.
ரோகித்துக்கு அடுத்து சுப்மன் கில்தான் இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் என்று பலராலும் பேசப்பட்டு வருகிறது. இருப்பினும் இளம் வீரரான அவரால் எப்படி இந்திய அணியை சமாளிக்க முடியும் என்பதும் கேள்வியாக உள்ளது.
டெஸ்ட் போட்டிகளை பொறுத்தவரை ரோகித் சர்மா கேப்டனாக தொடருவது சந்தேகம் என்றே தெரிகிறது. ஏனெனில் சமீபத்திய டெஸ்ட் தொடர்களில் அவரின் மோசமான செயல்பாடுகளால் இந்திய அணி தோல்வியை தழுவியது. இதன் காரணமாக டெஸ்ட் போட்டியில் அவருக்கு பதிலாக மாற்று கேப்டனை பி.சி.சி.ஐ. தேடும் பணியில் ஏற்கனவே இறங்கியுள்ளது.
இந்நிலையில் இந்திய அணியின் அடுத்த கேப்டனாக வருவதற்கு தகுதியானவர் யார் ? என்று முன்னாள் கேப்டனான கபில்தேவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த கபில்தேவ், "என்னைப் பொறுத்தவரை ஹர்திக் பாண்ட்யாதான் இந்திய அணியின் வெள்ளைப்பந்து கேப்டனாக இருக்க வேண்டும். இந்திய அணியில் திறமையான வீரர்கள் பலர் இருந்தாலும் பாண்ட்யாதான் என்னுடைய அடுத்த கேப்டன் தேர்வாக இருக்கிறார்" என்று கூறினார்.