கிரெடிட் கார்டுக்கான வட்டி வசூல் விவகாரத்தில் தேசிய குறைதீர் ஆணையத்தின் முந்தைய உத்தரவு ரத்து: உச்ச நீதிமன்றம் உத்தரவு

4 months ago 12

புதுடெல்லி: கிரெடிட் கார்டுக்கான வட்டி தொகையை வசூலிக்கும் விவகாரத்தில் கடந்த 2008ம் ஆண்டு தேசிய குறைதீர் ஆணையம் பிறப்பித்திருந்த உத்தரவை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் கடந்த 2008ம் ஆண்டு ஒரு உத்தரவை பிறப்பித்திருந்தது. அதில்,‘‘கிரெடிட் கார்டுக்கான விவகாரத்தில் அதற்கான பில் தொகையை காலதாமதமாக செலுத்தினால் 30சதவிகிதம் வரை வட்டி வசூலிக்கலாம்’’ என்று தெரிவித்திருந்தது. இதையடுத்து இந்த உத்தரவுக்கு எதிராக பல்வேறு வங்கிகள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து மேற்கண்ட மனுக்கள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பீலா.எம்.திரிவேதி, சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது வங்கிகள் தரப்பில், ‘‘கிரெடிட் கார்டில் கடன்பெற்ற வாடிக்கையாளர்களிடம் 45 நாட்களுக்கு வட்டி வசூலிக்கப்படுவதில்லை. முறையாக அல்லது முழுமையாக தொகையை செலுத்தாதவர்களுக்கு மட்டுமே வட்டி விதிக்கப்படுகிறது. மேலும் ரிசர்வ் வங்கியின் கீழ்வரும் வங்கிகளுக்கு தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் உச்சவரம்பை நிர்ணயிக்க முடியாது. ஏனெனில் அதற்கான அதிகாரம் அவர்களுக்கு கிடையாது என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது’’ எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,‘‘கிரெடிட் கார்டு விவகாரத்தில் வங்கிகள் வசூலிக்கும் வட்டி விகிதத்திற்கு உச்ச வரம்பை நிர்ணயிக்கும் அதிகாரம் தேசிய குறைதீர் ஆணையத்திற்கு இல்லை. எனவே இதில் முன்னதாக கடந்த 2008ம் ஆண்டு அந்த ஆணையம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. அதேநேரம், தாமதமாக செலுத்தப்படும் தொகை அல்லது பகுதியாக செலுத்தப்படாத தொகைக்கு அதிக வட்டிகளை வங்கிகள் விதிக்கக் கூடாது என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. அதனை கண்டிப்பாக வங்கிகள் கடை பிடிக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டனர்.

The post கிரெடிட் கார்டுக்கான வட்டி வசூல் விவகாரத்தில் தேசிய குறைதீர் ஆணையத்தின் முந்தைய உத்தரவு ரத்து: உச்ச நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article