
சென்னை,
தமிழகம் முழுவதும் 450க்கும் மேற்பட்ட என்ஜினீயரிங் கல்லூரிகளில் உள்ள இடங்களுக்கு மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவை உயர்க்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் நேற்று தொடங்கி வைத்தார். www.tneaonline.org என்ற இணையதளதில் மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. இணையதள வசதி இல்லாத மாணவர்கள் பயன்பெறும் வகையில் விண்ணப்பபதிவு மற்றும் கலந்தாய்வில் கலந்து கொள்ள உதவுதற்காக தமிழ்நாடு முழுவதும் என்ஜினீயரிங் சேர்க்கை சேவை மையங்களும் அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி விண்ணப்பதிவு தொடர்பான சந்தேகங்களுக்கு காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 1800-425-0110 என்ற எண்ணில் தொடர் கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கலை அறிவியல் கல்லூரிகளுக்கும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து முதல் நாளில் மட்டும் 22 ஆயிரம் மாணவர்கள் என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பித்து இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் 3.400 பேர் கட்டணம் செலுத்தி சான்றிதழ் பதிவேற்றம் செய்துள்ளனர். கலை அறிவியல் கல்லூரியில் சேருவதற்கு 1,800 பேர் விண்ணப்ப பதிவு செய்திருக்கிறார்கள். என்ஜீனியரிங் கல்லூரிகளை பொருத்தவரை அடுத்த மாதம் 6-ம் தேதி வரை விண்ணப்பம் பதிவு செய்யலாம். பாலிடெக்னிக், டிப்ளமோ படிப்புகளுக்கு வருகிற 23-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கலை அறிவியல் கல்லூரிகளுக்கு வருகிற 27-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மாணவ-மாணவிகள் தங்கள் பிடித்த கல்லூரிகளில் சேருவதற்கு ஆர்வமாக விண்ணப்பித்து வருகின்றனர்.