சென்னை: கிருஷ்ணகிரியில் போலி என்சிசி முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட வழக்கில் சிபிஐ விசாரணை தேவையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் அருகே கிங்ஸ்லி தனியார் மேல்நிலைப் பள்ளியில் தேசிய மாணவர் படையின் (என்சிசி) முகாம் ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் 17 மாணவிகள் அங்குள்ள கலையரங்கில் தங்கி பயிற்சி பெற்று வந்தனர். காவேரிப்பட்டணத்தைச் சேர்ந்த 30 வயது சிவராமன் தலைமையிலான குழுவினர் மாணவிகளுக்கு பயிற்சி அளித்தனர். அப்போது, இந்த முகாமில் பங்கேற்ற 8 ஆம் வகுப்பு மாணவியை(13 வயது) பயிற்சியாளர் சிவராமன் ஆகஸ்ட் 8-ம் தேதி இரவு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பாதிக்கப்பட்ட மாணவி பள்ளி முதல்வர் சதீஷ்குமாரிடம் புகார் தெரிவித்த போது அவர், இதை யாரிடமும் தெரிவிக்கக் கூடாது என மிரட்டியுள்ளார்.
இதனை அடுத்து மாணவி என்சிசி முகாமில் நடந்த சம்பவம் தொடர்பாக தனது தாயாரிடம் தெரிவிக்கவே இது வெளியே தெரியவந்தது. மாணவி அளித்த புகாரின் பேரில் பயிற்சியாளர் சிவராமன், பள்ளி முதல்வர் சதீஷ் குமார் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில் கிருஷ்ணகிரி தனியார் பள்ளியில் நடத்தப்பட்ட என்சிசி முகாம் போலியானது என தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்ற கோரி வழக்கறிஞர் சூரியபிராகசம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவானது உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருஷ்ணகுமார், பாலாஜி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்க்கில் விசாரணையை தொடர்ந்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. எனவே தமிழகத்தில் பணியாற்றும் பிற மாநிலத்தை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி தலைமையில் சிறப்பு விசாரணை குழுவை அமைக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆனால், போலி என்சிசி முகாம் நடத்திய பள்ளி மட்டுமின்றி வேறு 2 பள்ளிகளையும் சேர்த்து விசாரணை நடத்த அதிகாரியை நியமிக்க இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த வழக்கில் சிபிஐ விசாரணை தேவையில்லை என உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
The post கிருஷ்ணகிரியில் போலி என்சிசி முகாம் நடத்தப்பட்ட வழக்கில் சிபிஐ விசாரணை தேவையில்லை: உயர் நீதிமன்றம் appeared first on Dinakaran.