கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விலை வீழ்ச்சியால் மீன்களுக்கு உணவாகும் காய்கறிகள்

8 hours ago 2

*ஏரிகளில் டன் கணக்கில் கொட்டும் அவலம்

போச்சம்பள்ளி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் கோஸ், கேரட், பீட்ரூட் மற்றும் பூக்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இங்கு, விளையக்கூடிய காய்கறிகள் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.

அதேபோல், போச்சம்பள்ளி மற்றும் மத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் தக்காளி, கத்திரி, முள்ளங்கி, புடலங்காய், முருங்கை உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளை சாகுபடி செய்து உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கின்றனர். கடந்த மாதங்களில் காய்கறிகளுக்கு நல்ல விலை கிடைத்து வந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

தற்போது, நாளுக்கு நாள் காய்கறிகள் வரத்து அதிகரித்து வருகிறது. இதனால், காய்கறிகள் தேக்கமடைந்து விலை வீழ்ச்சியடைந்துள்ளது. விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பெருத்த நஷ்டத்திற்குள்ளாகியுள்ளனர். குறிப்பாக பீட்ரூட், கேரட், முட்டைகோஸ் ஆகியவைகளும் விலை சரிந்து வருகிறது. தற்போது, மற்ற காய்கறிகளை விட முருங்கைக்காய் சாகுபடி அதிகரித்து வருகிறது.

மேலும் கொத்தமல்லி, புதினா உள்ளிட்ட கீரை வகைகளை யாரும் கண்டு கொள்ளவில்லை. இதனால், சூளகிரி பகுதியில் தேங்கிய காய்கறிகளை டிராக்டரில் ஏற்றிச்சென்று நீர்நிலைகளில் கொட்டி அழித்தனர். இதையறிந்த மீன் குத்தகைதாரர்கள் ஓசூர் பகுதிக்கு நேரடியாக சென்று விவசாயிகளிடம் விலை பேசி காய்கறிகளை மொத்தமாக வாங்கி வந்து ஏரி மீன்களுக்கு உணவாக வழங்கி வருகிறார்கள்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த மாதம் முதல் வரலாறு காணாத அளவிற்கு அனைத்து வகை காய்கறிகளும் விலை குறைந்து வருகிறது. இதனால், பெருத்த நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. விலை போகாத காய்கறிகளை வேறு வழியின்றி அழித்து வருகிறோம். இதனால், ஏரி மீன்களுக்கு உணவாக வாங்கிச் செல்கிறார்கள். நஷ்டமடைந்தாலும் வேறு வழியின்றி விற்பனை செய்யும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்றனர்.

இதுகுறித்து மீன் குத்தகைதாரர்கள் கூறுகையில், ஏரியில் வளரக்கூடிய மீன்களுக்கு கூடுமான வரையிலும் இயற்கை உணவுகளை அளித்து வருகிறோம். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனைத்து காய்கறிகளும் மலிவாக கிடைப்பதால், ஓசூர் பகுதிக்கு நேரில் சென்று கோஸ், குடைமிளகாய், சுரைக்காய், பூசணி, வெண்பூசணி உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளை மொத்தமாக வாங்கி வந்து ஏரிகளில் வாழும் மீன்களுக்கு உணவாக அளித்து வருகிறோம் என்றனர்.

The post கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விலை வீழ்ச்சியால் மீன்களுக்கு உணவாகும் காய்கறிகள் appeared first on Dinakaran.

Read Entire Article