
லக்னோ,
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளரான யாஷ் தயாள் மீது, உத்திரபிரதேசம் மாநிலம் காசியாபாத் நகரை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த மாதம் திருமண மோசடி புகார் அளித்திருந்தார். மேலும் இதுகுறித்து, அம்மாநில முதலமைச்சர் தனிப்பிரிவிலும் புகார் மனு அளித்தார்.
அந்த பெண் தனது புகாரில், கடந்த 5 ஆண்டுகளாக யாஷ் தயாள் தன்னுடன் உறவில் இருந்ததாகவும், அப்போது தான் உணர்ச்சி ரீதியாகவும், மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் சுரண்டப்பட்டதாகவும் குற்றம் சாட்டினார். மேலும் திருமணம் செய்துகொள்கிறேன் எனக் கூறி வாக்குறுதி அளித்து தன்னை ஏமாற்றியதாக புகார் அளித்திருந்தார். அத்துடன் தன்னிடம் யாஷ் தயாளுடனான சேட்கள், ஸ்கிரீன் ஷாட்கள், வீடியோ அழைப்புகள் மற்றும் புகைப்படங்கள் ஆதரமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இது குறித்து உத்தரபிரதேச காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து யாஷ் தயாள் மீது பிஎன்எஸ் சட்டப்பிரிவு 69 இன் கீழ் (திருமணம் குறித்த தவறான வாக்குறுதிகளின் அடிப்படையில் செய்யப்படும் பாலியல் செயல்களைப் பற்றியது) உத்திரபிரதேச காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த குற்றத்திற்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இது குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.