சேலம், பிப்.10: சேலம் மாவட்டத்தில் கிராமப்புற மக்களின் போக்குவரத்து வசதிக்காக புதிய வழித்தடங்களில் மினிபஸ் சேவை தொடங்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களைச் சேர்ந்த அனைத்து தரப்பு மக்களுக்குமான போக்குவரத்தை உறுதிசெய்யும் வகையில், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, கிராமப்புறங்களுக்கான போக்குவரத்து சேவையை வழங்க, அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக மினிபஸ்களுக்கான புதிதாக விரிவான திட்டம் தயாரிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதிக குடும்பங்களை கொண்ட கிராமங்கள், குக்கிராமங்களின் குடியிருப்புகளில் உள்ள மக்களுக்கு போக்குவரத்து வசதியை உறுதி செய்யும் வகையில், பொருளாதார மற்றும் முறையான ஒருங்கிணைந்த சாலை போக்குவரத்து சேவையை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ள இத்திட்டம், வரும் மே 1ம் தேதி அமலுக்கு வரவிருக்கிறது.
தமிழ்நாடு முழுவதும் தற்போது 2,950 மினிபஸ்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், இத்திட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட்ட பின்னர், அதிகபட்சமாக 25,000 பேருந்துகள் வரை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, சேலம் மாவட்டத்தில் ஏற்கனவே குறைவான சேவை உள்ள வழித்தடங்களில் கூடுதலாகவும், போக்குவரத்து சேவை இல்லாத வழித்தடங்களில் புதிதாகவும், மினிபஸ்களை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி கூறியதாவது: கிராமப்புற மக்களின் போக்குவரத்து சேவைக்காக மினிபேருந்துகளை இயக்க, புதிதாக விரிவான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் படி வழித்தடத்தின் நீளம் 25 கி.மீ என அனுமதிக்கப்பட்டுள்ளது. இதில், குறைந்தபட்சம் சேவை செய்யப்படாத பாதையின் நீளம், மொத்த வழித்தட நீளத்தில் 65 சதவீதத்திற்கு குறையாமல் இருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட வழித்தடத்தின் தொடக்க புள்ளி மற்றும் முனையப்புள்ளி ஆகியவை, சேவை செய்யப்படாத வழித்தடத்தில் உள்ள ஏதேனும் ஒரு குடியிருப்பாகவோ, கிராமமாகவோ இருக்க வேண்டும். அதில் ஒன்று பேருந்து நிறுத்தமாகவோ அல்லது பேருந்து நிலையமாகவோ இருக்கலாம்.
புதிய மினி பேருந்து திட்டத்தின் படி, புதிய அனுமதிச் சீட்டு வழங்கும் தூரம் இறுதி செய்யப்பட்டுள்ளது. வழித்தடத்தை ஆய்வு செய்து அவை உறுதிப்படுத்தப்படும். ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்ட வழித்தடத்தில், ஒருநாளைக்கு 4 நடைகளுக்கு குறைவாக பேருந்து அல்லது மினி பேருந்து இயக்கப்படும் வழித்தடங்கள், அனுமதிக்கப்படாத வழித்தடங்களாக கருதப்படும். ஒரு குறிப்பிட்ட வழித்தடத்திற்கு வழங்கப்படும் அனுமதிச் சீட்டுகளின் எண்ணிக்கையை உறுதிசெய்து அறிவிக்கை வெளியிடப்படும். ஒரு வழித்தடத்தில் அனுமதிக்கப்பட்ட அனுமதிச்சீட்டுகளின் எண்ணிக்கையை விட, கூடுதலான எண்ணிக்கையில் விண்ணப்பங்கள் பெறப்பட்டால், குலுக்கல் முறையில் அனுமதிச் சீட்டுக்கள் வழங்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் அறிவிக்கை செய்யப்பட்ட வழித்தடத்தில் கூடுதலான பயணிகள் அல்லது அதிக மக்கள் தொகை இருக்கும் நேர்வில், நடப்பில் உள்ள வாகன உரிமையாளர்கள் அங்கு வாகனங்களை இயக்கவில்லை எனில், கூடுதலான வாகனங்கள் அனுமதிக்கப்படும். ஒரே வழித்தடத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட வாகன உரிமையாளர்கள் அனுமதி கேட்டு விண்ணப்பிக்கும் போது குலுக்கல் முறையில் வாகன உரிமையாளர் தேர்வு செய்யப்படுவார்.
தற்போது நடைமுறையில் உள்ள மினி பேருந்து இயக்குனர்கள், இந்த புதிய திட்டத்திற்கு மாற விரும்பினால் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு விண்ணப்பிக்கலாம். மினி பேருந்துகளில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் தவிர்த்து அதிகபட்சமாக 25 இருக்கைகள் வரை அனுமதிக்கப்படும். புதிய விரிவான மினி பேருந்து திட்டத்தில் மினி பேருந்துகளில் வசூலிக்கப்படும் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இக்கட்டண விவரம் ஏற்கனவே மினி பேருந்துகளை இயக்கி வரும் வாகன உரிமையாளர்களுக்கும், புதிதாக அனுமதிச் சீட்டு பெறும் மினி பேருந்து உரிமையாளர்களுக்கும் பொருந்தும். இந்த புதிய கட்டண முறை வரும் மே 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இவ்வாறு கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்தார்.
The post கிராமப்புற மக்களின் வசதிக்காக மினிபஸ் தொடங்க நடவடிக்கை appeared first on Dinakaran.