கரூர், ஏப்.24: கரூர் மாவட்ட கிராம பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளில் வர்ணம் பூச நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாலை போக்குவரத்து என்பது தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலைகள், நகர சாலைகள், கிராம சாலைகள் என்ற வகையில் உள்ளது. இதில் தேசிய நெடுஞ்சாலைகள் அனைத்துமே நான்குவழி சாலைகளாகும். இதில் நான்கு வழி சாலைகளாக மாற்றம் செய்யப்படுவதற்கு முன் முக்கிய இடங்களில் வேகத்தடைகளும், சிக்னல்களும் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் நான்குவழி தடங்களாக அமைத்த பின்னர் வேகத்தடைகள் என்பது கிடையாது. சாலை பிரியும் இடங்களில் சிக்னலும் அதற்கு தூரத்திற்கு (சுமார் 100 மீட்டர் ) முன்பாக நெடுஞ்சாலைத்துறையின் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இதனைப் பார்த்து வாகன ஓட்டிகள் சாலை விதிகளை தெரிந்து கொள்வார்கள்.
ஆனால் மாநில நெடுஞ்சாலைகளில் முக்கிய இடங்களில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒளிரும் வெள்ளை வண்ணம் பூசப்பட்டிருக்கும். வேகமாக வரும் கனரக வாகனங்கள், கார்கள், இருசக்கர வாகனங்கள், சைக்கிளில் செல்பவர்கள் அனைவரும் வேகத்தடைக்கு முன்பாக தங்கள் வாகனங்களின் வேகத்தை குறைத்து வேகத்தடையை கடந்து செல்வார்கள். இல்லையென்றால் விபத்தில் சிக்கிக்கொள்ள நேரிடும். தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை தவிர நகர பகுதிகள் மற்றும் உட் கிராமங்களிலும் அதிக போக்குவரத்து இருக்கும். இங்கு பெரும்பாலும் இருசக்கர வாகனங்களின் போக்குவரத்துதான் அதிகளவில் இருக்கும். கரூர் மாவட்டத்தின் முக்கிய நகரப் பகுதிகள் மட்டுமின்றி, உட்கிராமங்கள் அனைத்து பகுதிகளுக்கும் வாகனங்கள் எளிதாக செல்லும் வகையில் உட்புறச் சாலைகள் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.
இந்த வகைச் சாலைகளில் பிரதான வளைவு மற்றும் பல்வேறு சாலைகள் சந்திப்பு ஆகிய பகுதிகளில் விபத்தினை கட்டுப்படுத்தும் வகையில் வேகத்தடை அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. ஆனால், இதுபோன்ற பெரும்பாலான வேகத்தடைகளில் வெள்ளை வர்ணம் பூசாத காரணத்தால் இரவு நேரங்களில் இரண்டு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்கிக் கொள்கின்றனர். எனவே, இதுபோன்ற சாலைப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளை கண்டறிந்து அதன் மீது வெள்ளை வர்ணம் பூச தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post கிராம பகுதி சாலைகளில் வெள்ளை வர்ணம் பூசாத வேகத்தடையால் விபத்து அபாயம் appeared first on Dinakaran.