*சிறப்பு தலைமை செயலாளர் உத்தரவு
திருப்பதி : நோயாளிகளுக்கு சரியான நேரத்தில் மருத்துவ சேவை வழங்க வேண்டும் என கிராம சுகாதார மருத்துவமனையில் ஆய்வு செய்த சிறப்பு தலைமைச் செயலாளர் உத்தரவிட்டார்.
ஆந்திர மாநில சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சிறப்பு தலைமை செயலாளரும் மண்டல பொறுப்பு அதிகாரியுமான கிருஷ்ணபாபு, குடும்ப நல ஆணையர் வீரபாண்டியன் மற்றும் திருப்பதி கலெக்டர் வெங்கடேஸ்வர் ஆகியோர் திருப்பதி ரூரல் தனப்பள்ளி கிராம சுகாதார மருத்துவமனையை நேற்று ஆய்வு செய்தனர்.
அப்போது பேசிய சிறப்பு தலைமைச் செயலாளரும் மண்டலப் பொறுப்பு அலுவலருமான கிருஷ்ணா பாபு, ‘மருத்துவமனைக்கு தினமும் வரும் நோயாளிகளின் விவரங்களை ஊழியர்கள் பதிவு செய்து சரியான நேரத்தில் மருத்துவ சேவைகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு சரியான நேரத்தில் தடுப்பூசி போட வேண்டும். தொற்றா நோய்கள் கணக்கெடுப்பு செயல்முறை குறித்து விவரங்களை பராமரிக்க வேண்டும்.
ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் குறித்த தரவு சேகரிப்பை கணக்கெடுப்புகள் மூலம் முறையாக ஏஎன்எம்கள் நடத்த வேண்டும். கணக்கெடுப்பு மூலம் சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில், சர்க்கரை நோய் தொடர்பான மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்வதும், நோய் கண்டறியப்பட்டவர்களுக்கு சரியான நேரத்தில் சிகிச்சை வழங்கப்படுவதையும் உறுதி செய்வது அவசியம்.
மருத்துவமனையில் இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை தொடர்பான மருந்துகளை மருத்துவ கண்காணிப்பாளர் கிடைக்க செய்ய வேண்டும். ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் சிகிச்சை பெறும் மக்களின் எண்ணிக்கையை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். அவர்களுக்கு தேவையான மருந்துகளை வழங்குவதில் ஏ.என்.எம்.கள் மற்றும் ஊழியர்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்’ என்றார்.
நிகழ்ச்சியில் பயிற்சி கலெக்டர் சந்தீப் ரகு வன்ஷி, மாவட்ட மருத்துவ சுகாதார அலுவலர் பாலகிருஷ்ண நாயக், டிஐஓ சாந்த குமாரி, டிசிஎச்எஸ் ஆனந்தமூர்த்தி மருத்துவ கண்காணிப்பாளர் உதய, ஆஷா பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து ஆந்திர மாநில மருத்துவம், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறையின் சிறப்பு தலைமைச் செயலாளர் கிருஷ்ணா பாபு திருப்பதி திருச்சானூர் மாம்பழ மார்க்கெட்டில் உள்ள மாம்பழ ஏற்றுமதி மையத்தில் ஆய்வு செய்தார். அப்போது கலெக்டர் வெங்கடேஸ்வர் உடன் இருந்தார்.
The post கிராம சுகாதார மருத்துவமனையில் ஆய்வு நோயாளிகளுக்கு சரியான நேரத்தில் மருத்துவ சேவை வழங்க வேண்டும் appeared first on Dinakaran.